Olympic Medals: முழு லிஸ்ட்! ஒலிம்பிக்கில் தனிநபராக பதக்கங்களை குவித்த டாப் 10 வீரர்கள் யார்? யார்?
Most Individual Olympic Medals: உலகமே திருவிழாவாக கொண்டாடும் ஒலிம்பிக் தொடரில் இதுவரை தனிநபராக அதிக பதக்கங்களை வென்ற வீரர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
உலகமே உற்றுநோக்கும் விளையாட்டுத் தொடர்களில் ஒன்று ஒலிம்பிக். உலகில் பெரும்பாலும் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளும் அடங்கிய தொடராக ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் தொடர் வரும் ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது.
இந்த ஒலிம்பிக் தொடருக்காக அனைத்து நாடுகளும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்த சூழலில், ஒலிம்பிக் தொடரில் தனிநபராக அதிக பதக்கங்கள் வென்ற வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.
11.ரே எவ்ரி:
அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற தடகள வீரர் ரே எவ்ரி. 1900 காலகட்டத்தில் அமெரிக்காவிற்கு தடகளம் மூலமாக பெருமை சேர்த்தவர். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ட்ரிபிள் ஜம்ப் போட்டிகளில் அசத்திய இவரை மனித தவளை என்றே பாராட்டுவார்கள். 1900, 1904 மற்றும் 1908 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இவர் 8 தங்கம் பதக்கம் பெற்றுள்ளார். அதில் தலா 3 தங்கங்கள் நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதலில் கிடைத்தது. இரண்டு ட்ரிபிள் ஜம்ப்பில் வென்றார்.
10.உசேன் போல்ட்:
மின்னல் வேக வீரர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012 மற்றும் 2016 ஆகிய ஒலிம்பிக்கில் பங்கேற்ற அவர் 100 மீட்டர், 200 மீட்டர், 4x100 மீட்டர் ரீலே பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் இன்றளவும் ஓட்டப்பந்தயத்தில் பலருக்கும் அவரே முன்னுதாரணம் ஆவார்.
9.மாட் பியாண்டி:
அமெரிக்காவின் சிறந்த நீச்சல் வீரரான மாட் பியாண்டி இதுவரை 11 ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 8 தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் அடங்கும். 1984, 1988 மற்றும் 1992 ஒலிம்பிக்கில் இந்த பதக்கங்களை அவர் வென்றுள்ளார். ப்ரீஸ்டைல் நீச்சல் பிரிவில் இவர் அதிக பதக்கங்களை குவித்துள்ளார்.
8.ஜென்னி தாம்ப்சன்:
உலகின் தலைசிறந்த நீச்சல் வீராங்கனைகளில் அமெரிக்காவின் ஜென்னி தாம்ப்சன் எப்போதும் முதன்மையாக திகழ்கிறார். 1992ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை நடைபெற்ற நான்கு ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள அவர், 12 பதக்கங்களை குவித்துள்ளார். அதில், 8 பதக்கங்கள் தங்கப்பதக்கம் ஆகும். 100 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றுள்ளார்.
7.சாவோ கடோ:
ஜப்பானின் சாவோ கடோ தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீரர் ஆவார். 12 பதக்கங்களை அவர் ஒலிம்பிக்கில் பெற்று அசத்தியுள்ளார். 1968, 1972 மற்றும் 1976 ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இவர்தான் ஒலிம்பிக்கில் இதுவரை ஜிம்னாஸ்டிக் பிரிவில் அதிக பதக்கங்களை வென்ற வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார்.
6.பிர்கிட் ஃபிஸ்ஷெர்:
ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிர்கிட் ஃபிஸ்ஷெர் இதுவரை ஒலிம்பிக்கில் 12 பதக்கங்களை பெற்றுள்ளார். 1980 முதல் 2004 வரை ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனையான பிர்கிட், 1984ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் பங்கேற்கவில்லை. இதில் தங்கம் மட்டும் 8 ஆகும். மீதமுள்ள 4 பதக்கங்கள் வெள்ளி ஆகும்.
5.கார்ல் லீவிஸ்:
அமெரிக்காவைச் சேர்ந்த தடகள வீரரான கார்ல் லீவிஸ் ஒரு சிறந்த தடகள வீரர் ஆவார். இவர் 1984, 1988, 1992 மற்றும் 1996 ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 9 தங்கத்தையும், 1 வெள்ளி என மொத்தம் 10 பதக்கங்களை குவித்துள்ளார்.
4.மார்க் ஸ்பிட்ஸ்:
அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஸ்பிட்ஸ் சிறந்த தடகள வீரர் ஆவார். இவர் மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றியுள்ளார். அதில் 9 தங்கத்தையும், 1 வெள்ளியையும் மற்றும் 1 வெண்கலத்தையும் கைப்பற்றியுள்ளார்.
3.பாவோ நுர்மி:
உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர்களில் பின்லாந்தின் பின் பாவோ நுர்மிக்கு தனி இடம் உண்டு. இவர் 1500 மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் பிரிவுகளில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவருக்கும் பறக்கும் பின் என்று செல்லப்பெயரும் உண்டு. இவர் ஒலிம்பிக்கில் மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் 9 தங்கப்பதக்கமும், 3 வெள்ளிப்பதக்கமும் அடங்கும்.
2.லாரிசா லாட்டினினா:
உக்ரைனைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லாரிசா உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். இவர் ஒலிம்பிக்கில் மட்டும் ஜிம்னாஸ்டிக்கின் பல்வேறு பிரிவுகளில் 9 தங்கத்தை குவித்துள்ளார். இதுதவிர 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலப்பதக்கத்தையும் வென்றுள்ளார். 1956, 1960 மற்றும் 1964 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இந்த 18 பதக்கங்களையும் இவர் கைப்பற்றி அசத்தினார். மைக்கேல் பெல்ப்ஸ் வருவதற்கு முன்பு வரை ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வென்ற நபர் என்ற சாதனையை தன்வசம் வைத்திருந்தவர் லாரிசா.
1.மைக்கேல் பெல்ப்ஸ்:
ஒலிம்பிக் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வரும் பெயர்களின் முதன்மையானது மைக்கேல் பெல்ப்ஸ். தண்ணீரே தத்தெடுத்த குழந்தை போல நீச்சல் பிரிவில் மைக்கேல் பெல்ப்ஸ் படைக்காத சாதனைகளே இல்லை. எந்தவொரு வீரரும் படைக்காத அளவிற்கு ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில் பதக்கங்களாக குவித்த ஒரே வீரர். மொத்தம் 28 பதக்கங்களை ஒலிம்பிக்கில் கைப்பற்றி தனிநபராக அதிக பதக்கங்கள் கைப்பற்றிய நபர் என்ற சாதனையை யாருமே நெருங்க முடியாத அளவிற்கு படைத்துள்ளார். அதில், தங்கம் மட்டுமே 23 தங்கம் ஆகும். 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் மீதமுள்ள பதக்கங்கள். இன்றளவும் நீச்சலில் இவர் படைத்துள்ள சாதனைகள் முறியடிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.