Neeraj Chopra: நீதான்யா நம்பிக்கை! பாரிஸில் முதல் தங்கத்தை வெல்வாரா தங்கமகன் நீரஜ் சோப்ரா? இன்று ஃபைனல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா களமிறங்குகிறார். அவர் தங்கம் வெல்வாரா? என்று ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்திய அணி இதுவரை 3 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இந்த ஒலிம்பிக் தொடர் தொடங்கியது முதலே இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் நீரஜ் சோப்ரா.
தங்கம் வெல்வாரா தங்கமகன்?
நேற்று முன்தினம் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டியில் அபாரமாக முதல் வாய்ப்பிலே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் அதிகளவு தொலைவிற்கு வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த நிலையில், ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 11.55 மணிக்கு நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நீரஜ் சோப்ராவிற்கு சவால் மிகுந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் உலகின் தலைசிறந்த வீரர்கள் நீரஜ் சோப்ராவுடன் பதக்கத்திற்காக மல்லுகட்டுகின்றனர்.
மல்லுக்கு நிற்பது யார்?
கிரெனடா நாட்டின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், ஜெர்மனியின் வெப்பர், பாகிஸ்தானின் அர்ஷீத் நதீம், கென்யாவின் ஜூலியஸ் யேகோ, பிரேசிலின் லூயிஸ் மெளரிசியோ டா சில்வா, செக் குடியரசின் ஜகுப் வட்லேஜ், பின்லாந்தின் டோனி, மால்டோவா நாட்டின் ஆண்ட்ரியன் மர்டரே, பின்லாந்தில் ஆலிவர், டிரினிடாட் டொபோகாவின் கிஷோர்ன் வால்காட் மற்றும் பின்லாந்தில் லஸ்ஸி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் சவால் மிகுந்த வீரர்களாக உள்ளனர். குறிப்பாக ஜெர்மனியின் வெப்பர், செக் குடியரசின் ஜகுப், பாகிஸ்தானின் அர்ஷீத் நதீம் முக்கிய போட்டியாளர்களாக உள்ளனர்.
காத்திருக்கும் சாதனைகள்:
இருப்பினும் நீரஜ் சோப்ரா பிரான்ஸ் நாட்டிலே அதிக முறை பயிற்சி மேற்கொண்டவர் என்பதால் அவருக்கு அந்த நாட்டு சீதோஷ்ண நிலை ஏற்றதாக இருக்கும் என்பது அவருக்கு கூடுதல் சாதகமாக அமைகிறது. இந்த போட்டியில் நீரஜ் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தால் இந்த ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். மேலும், நீரஜ் சோப்ரா இன்று தங்கம் வென்றால் இந்தியாவிற்காக இரண்டு முறை தங்கம் வென்ற முதல் இந்தியர், அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பல சாதனைகளை தன்வசம் படைப்பார்.
இன்றைய போட்டியில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் மற்றும் ஷெராவத் இருவரும் மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் இருந்தாலும் நேரடியாக இன்று தங்கத்திற்கான மோதலில் களமிறங்குவது நீரஜ் சோப்ராவே ஆவார். இவர் ஏற்கனவே ஈட்டி எறிதலில் இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார்.
நேற்று 100 கிராம் எடை அதிகரிப்பால் இறுதிப்போட்டிக்கு முன்னதாக வினேஷ்போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில், சோகத்தில் உள்ள இந்திய ரசிகர்களின் மனதிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்புடன் ரசி்கர்கள் காத்துள்ளனர்.