பாரா ஒலிம்பிக் 2024 - தலைவர் சந்திரசேகரை சந்தித்த வீரர் மற்றும் வீராங்கனைகள் - ஏன் தெரியுமா ?
பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக வீரர்களுக்கு ரூ. 5 கோடி ஊக்கத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் 2024 பிரான்ஸ் நாட்டின் பாரீஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வாழ்த்தினார்.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி ரூபாய் , வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனைகள் நித்ய ஸ்ரீ மற்றும் மனிஷா ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் , ஆடவர் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீரர் மாரியப்பனுக்கு 1 கோடி ரூபாய், என உயரிய ஊக்கத் தொகையாக மொத்தம் 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாரா ஒலிம்பிக் தலைவர் சந்திரசேகரை சந்தித்த வீரர் மற்றும் வீராங்கனைகள்
பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் 29 பதக்கங்கள் பெற்று இந்திய வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இன்னிலையில் இவர்கள் அனைவரும் தங்களை ஊக்குவித்த தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்திய வீரர்கள் 29 பதக்கங்கள் பெற்று உலக அளவில் பதினெட்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தனர். இதில் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பதக்கங்கள் பெற்று பல சாதனைகள் செய்து வருகின்றனர் . இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகர். இவர் நலிவடைந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள கிராம மற்றும் நகர் புறங்களுக்கு சென்று பாரா ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாவட்ட அளவில் சிறந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவியும் ஊக்கமும் அளித்து சர்வதேச அளவில் சாதிக்க வைக்க வேண்டும் என ஐந்து வாக்குறுதிகள் கொடுத்து அதனை நிறைவேற்றி காட்டியுள்ளார்.
மேலும் தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சந்திரசேகருக்கு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நன்றி தெரிவித்தனர். இவரை போன்று ஒவ்வொரு சங்கத்தின் தலைவர்களும் செயல்பட்டால் இந்தியா வெகு விரைவில் ஒலிம்பிக்கில் முதல் இடத்தை பிடிக்கும் என தெரிவித்தனர்.