Wayanad Landslide: வயநாடு மக்களுக்கு நிதியுதவி அளித்த செஸ் மாஸ்டர் டி குகேஷ்! குவியும் பாராட்டு
வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டு மக்களுக்கு உதவும் வகையில் தமிழக செஸ் வீரர் குகேஷ் ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவு:
கேரளம் மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை ஆம் தேதி திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல் 300க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் நரேந்திர மோடி வயநாடு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.
செஸ் கிராண்ட் மாஸ்டர் நிதியுதவி:
இந்நிலையில், தமிழக இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் டி குகேஷ் ரூ.10 லட்சம் கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். அண்மையில் டி குகேஷ் உலகின் நம்பர் 1 ஜூனியர் செஸ் வீரராக அறிவிக்கப்பட்டார். இதற்கான பாராட்டு விழா தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக செஸ் பேஸ் இந்தியாவின் முதன்மை நிர்வாக அதிகாரி சாகர் ஷா கலந்து கொண்டார்.
அதோடு மட்டுமின்றி இந்த விழாவில் சிறப்பம்சமாக 220 டிரோன் கேமராக்கள் மூலமாக குகேஷிற்கு வாழ்த்து தெரிவிக்கும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குகேஷிற்கு பென்ஸ் கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது கேரளா வயநாடு நிலச்சரிவால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவும் வகையில் தனது பங்காக ரூ.10 லட்சத்தை நிவாரண நிதியாக குகேஷ் அளித்துள்ளார்.