Tokyo Olympics 2020: கையில் ஒலிம்பிக் டாட்டூ... இத்தாலியில் தீவிரப் பயிற்சி : நாளை களம்காணும் பவானிதேவி...!
இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்குக்கு செல்லும் முதல் வாள்சண்டை வீரர் பவானி தேவி. ஹங்கேரியில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் அந்த நாட்டு வீரரை வீழ்த்தியதை அடுத்து பவானி ஒலிம்பிக்குக்குத் தேர்வானார்.
ஒலிம்பிக் போட்டிகளில் வாள்சண்டை என்பது பண்டைய காலத்திலிருந்தே இருந்துவந்துள்ளது. இருந்தாலும் 1924க்குப் பிறகுதான் பெண்கள் வாள்சண்டை போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். அதில் சாப்ரே வகை வாள் சண்டை அறிமுகப்படுத்தப்பட்டது 2004ல். சென்னையைச் சேர்ந்த 27 வயது பவானிதேவி கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான் தனது பள்ளியில் நடந்த வாள்சண்டை போட்டியில் பங்கெடுத்தார். அன்று கையில் ஏந்திய வாள் இன்று பவானியை ஒலிம்பிக் வரை அழைத்துச் சென்றுள்ளது. இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்குக்கு செல்லும் முதல் வாள்சண்டை வீரர் பவானி தேவி. ஹங்கேரியில் நடந்த உலகக்கோப்பைப் போட்டியில் அந்த நாட்டு வீரரை வீழ்த்தியதை அடுத்து பவானி ஒலிம்பிக்குக்குத் தேர்வானார்.
View this post on Instagram
ஒலிம்பிக்குக்த் தேர்வானதும் அவர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ஐந்து வர்ண ஒலிம்பிக் வளையத்தைத் தனது இடதுகையில் டாட்டூ குத்திக்கொண்டதுதான். ஒலிம்பிக்கில் விளையாடவேண்டும் என்பது பவானியின் குழந்தைப் பருவத்துக் கனவு. ஆனால் பலகோடி விசிறிகளைக் கொண்ட கிரிக்கெட் போலவோ அல்லது ஓரளவுக்கு விசிறிகளைக் கொண்ட ஹாக்கி போலவோ இந்த வாள்சண்டை போட்டிக்கு கவனம் இல்லாத சூழலில் தனியொருத்தியாகப் போராடி வாய்ப்பைப் பெற்று ஒலிம்பிக்கில் நாளை களம்காண இருக்கிறார் பவானி தேவி. 2016-2017 ஆண்டுகளில் சர்வதேச அளவில் வாள்சண்டைப் பட்டியலில் 36வது இடத்தைப் பெற்றவர் இவர். பள்ளிகளில் விளையாட்டு என்னும் திட்டத்தின் கீழ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் வாள் சண்டை விளையாட்டில் சேர்ந்தார் பவானி. இவரது பயணம் இப்படித்தான் தொடங்கியது. கையில் மூங்கில் கழி வைத்து வாள் சுழற்றுவதுபோலச் சுழற்றி பயிலத்தொடங்கிய சிறுமி பவானி இன்று வேலு நாச்சியார் என வாள் சுழற்றுகிறார்.
Go for Strength & Strategy.#fencing #tokyo2021 #teambhavani pic.twitter.com/8QZL3JmzK6
— C A Bhavani Devi (@IamBhavaniDevi) July 16, 2021
அப்பா கோயில் அர்ச்சகர் சில வருடங்களுக்கு முன்பு அவர் இறந்த நிலையில். வீட்டைப் பராமரித்து வரும் பவானியின் அம்மாதான் அவரது கனவுக்குத் துணை நம்பிக்கை எல்லாம். இந்த ஒலிம்பிக் கனவுக்காக பவானி பல தியாகங்களைச் செய்யவேண்டி இருந்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது எளிதான காரியம் இல்லை என்பது தெரியும் ஆனால் அங்கே தான் வரலாற்றைப் படைக்க விரும்புவதாகச் சொல்கிறார் பவானி.இதற்காக காலை இரண்டு மணி நேரம் மற்றும் மாலை இரண்டு மணி நேரம் எனத் தொடர்பயிற்சி மேற்கொள்கிறார். சில சமயம் ஆறு மணி நேரம் கூடத் தொடர்ச்சியாகப் பயிற்சி எடுக்கிறார் இவர். வெளியே எதுவும் போட்டி இல்லாததால் பயிற்சி பட்டறையிலேயே ஒருவருக்கு ஒருவர் போட்டி வைத்துக்கொள்வோம் என்னும் பவானி இத்தாலியின் டுஸ்கானில் தனது பயிற்சியாளர் நிக்கோலோ சன்னோட்டியிடம் சிறப்பு வாள்சண்டை பயிற்சி எடுத்து வருகிறார். நாளை காலை 5:30 மணிக்கு துனீசியாவின் பென் அசீசியை எதிர்கொள்ள இருக்கிறார். ஆல் தி பெஸ்ட் பவானி!