கொரோனா பாதிப்பு டூ ஒலிம்பிக் பதக்கம்- வெள்ளி வென்ற நிஷாத் குமாரின் சாதனைப் பயணம்
டோக்கியோ பாராலிம்பிக் டி-47 உயரம் தாண்டுதலில் 2.06 மீட்டர் உயரம் தாண்டி இந்தியாவின் நிஷாத் குமார் வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் தடகள போட்டிகளில் இன்று ஆடவருக்கான டி-47 உயரம் தாண்டுதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் மற்றும் ராம்பால் சாஹர் பங்கேற்றனர். இதில் 2.06 மீட்டர் உயரம் தாண்டி நிஷாத் குமார் 2ஆவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அத்துடன் தன்னுடைய முந்தைய ஆசிய சாதனையை சமன் செய்து பதக்கம் வென்று அசத்தினார். தேசிய விளையாட்டு தினமான இன்று இந்தியாவிற்கு டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் யார் இந்த நிஷாத் குமார்? எப்படி பாரா உயரம் தாண்டுதல் போட்டிக்கு வந்தார்?
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் பிறந்தவர் நிஷாத் குமார். இவருக்கு 8 வயதாக இருக்கும் போது விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் இவருடைய வலது கை பாதி துண்டிக்கப்பட்டது. அந்த விபத்தால் முடங்கி இருக்காமல் தன்னக்குள் அதிக தன்னம்பிக்கையை அவர் வளர்த்துள்ளார். அதன்விளைவாக தன்னுடைய பள்ளி பருவம் முதல் உயரம் தாண்டுதல் போட்டிகளில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளார்.
முதலில் சாதாரண மாணவர்களுடன் இவர் போட்டி போட்டுள்ளார். அதில் இவர் நன்றாக செயல்பட தொடங்கியதை தொடர்ந்து இவரை பாரா தடகளம் பிரிவில் கவனம் செலுத்த பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இவர் உயரம் தாண்டுதலில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் இவர் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அது இவருடைய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பெரிய தடையாக அமைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் நன்றாக மீண்டு வந்த இவர் மீண்டும் சிறப்பாக பயிற்சி செய்தார்.
#Silver Medal for 🇮🇳#Athletics: Nishad Kumar wins silver medal with a best effort of 2.06m in Men's High Jump T47 event.#Tokyo2020 | #Paralympics | #Praise4Para pic.twitter.com/v5042FmCSX
— Doordarshan Sports (@ddsportschannel) August 29, 2021
2021ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற ஃபசா பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் 2.06 மீட்டர் உயரத்தை தாண்டி ஆசிய சாதனை படைத்தார். அத்துடன் அந்தப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் வென்றார். இதனால் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இவர் நிச்சயம் பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு ஏற்ப டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் தன்னுடைய ஆசிய சாதனை தூரமான 2.06 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு இரண்டாவது பதக்கம் இதுவாகும். தேசிய விளையாட்டு தினமன்று இந்தியாவிற்கு இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வென்ற பவினாவுக்கு ட்விட்டரில் குவியும் வாழ்த்து!