Olympics Wrestling: இந்தியாவின் அடுத்த நம்பிக்கை.. அரையிறுதியில் அமன் ஷெராவத்!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் 27 தங்கபதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 26 தங்கபதக்கங்களுடன் சீனாவும் மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நான்காவது இடத்தில் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இடம் பிடித்து உள்ளன.
இந்தியாவில் இருந்து 117 வீரர்கள் இந்த முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றாலும் இந்தியா சார்பில் 3 வெண்கலப்பதக்கங்கள் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. இச்சூழலில் தான் ஈட்டி எறிதல் பிரிவில் இன்று இரவு நீரஜ் சோப்ரா இறுதி போட்டியில் விளையாட உள்ளார். இதில் அவர் வெற்றி பெறும் பட்சத்தில் இந்தியா சார்பில் முதல் தங்கத்தை இந்த ஒலிம்பிக்கில் வெல்வார்.
அரையிறுதியில் அமன் ஷெராவத்:
இந்நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். 2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் அமன் ஷெராவத் வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகாரோவை எதிர்த்து விளையாடிய இவர் 12-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.