Khel Ratna Awards | நீரஜ் சோப்ரா, மித்தாலி ராஜ், சுனில் சேத்ரி உள்ளிட்ட 11 பேர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை !
இந்தாண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதிற்கு 11 பேரும், அர்ஜூனா விருதிற்கு 35 பேரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக் ஆகிய இரண்டிலும் இந்திய வீரர் வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி 7 பதக்கங்களை வென்று இருந்து. அதன்பின்னர் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 5 தங்கப்பதக்கம் உட்பட இந்திய அணி 19 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான விளையாட்டு விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டவர்கள் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதன்படி இம்முறை விளையாட்டு துறையில் உயரிய விருதான கேல் ரத்னா விருதிற்கு 11 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மித்தாலி ராஜ், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கம் வென்ற அவானி லெகாரா, ஹாக்கி வீரர் பி.ஆர்.ஶ்ரீஜேஷ் உள்ளிட்ட 11 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மகளிர் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற லோவ்லினா பார்கோயினும் இந்த விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர்,மணீஷ் நர்வால் உள்ளிட்டவர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் முறையாக கேல் ரத்னா விருதை 5 பேர் பெற்றனர். கடந்தாண்டு ரோகித் சர்மா, மணிகா பட்ரா, மாரியப்பன் தங்கவேலு, வினேஷ் போகட், ராணி ராம்பால் ஆகிய 5 பேர் கேல் ரத்னா விருதை பெற்றனர்.
Olympic champion Neeraj Chopra and silver medal-winning wrestler Ravi Dahiya among 11 athletes picked for Khel Ratna award for year 2021
— Press Trust of India (@PTI_News) October 27, 2021
அவர்களை தொடர்ந்து இந்தாண்டும் இந்த விருதிற்கு 11 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். பிசிசிஐ சார்பில் மித்தாலி ராஜ், அஸ்வின் மற்றும் ஷிகார் தவான் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் இருந்து மித்தாலி ராஜ் இந்தாண்டு விருதிற்கு தேர்வாகியுள்ளார். இவர்கள் தவிர 35 பேர் அர்ஜூனா விருதிற்கு தேர்வாகியுள்ளனர். அதில் ஷிகார் தவான், சுஹேஷ் யெத்திராஜ், நிஷாத் குமார், பவினா பட்டேல் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக விளையாட்டு துறையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு வந்த ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை இந்தாண்டு மத்திய அரசு பெயர் மாற்றியது. அதன்படி இந்தாண்டு முதல் விளையாட்டு துறையின் உயரிய விருது மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: மார்கரம் டூ கான்வே- டி20 உலகக்கோப்பை சூப்பர் 12-இன் சூப்பர் கேட்சுகள் ! - வீடியோ !