Seema Bisla: ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை.. ஓராண்டு தடை விதிப்பு.. காரணம் என்ன..?
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (NADA) ஓராண்டு தடை விதித்துள்ளது.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லாவுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (NADA) ஓராண்டு தடை விதித்துள்ளது. தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் ஊக்கமருந்து எதிர்ப்பு ஒழுங்குமுறை குழு (ADDP) நடத்திய தடுப்பு விதிமுறைகளை மீறியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
என்ன நடந்தது..?
ஹரியானாவை சேர்ந்த 30 வயதான சீமா பிஸ்லா ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது, வீரர் மற்றும் வீராங்கனைகள் எந்தவொரு போட்டியில் பங்கேற்காத நேரத்திலும் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்ற தகவலை விண்ணப்பம் மூலம் நிரப்பி கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து, அவர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும்.
உலக ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சியின் விதிமுறைகளின்படி, 12 மாத கால இடைவெளியில் மூன்று முறை தாங்கள் இருக்கும் இடத்தை குறிப்பிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அது ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறுவதாகும்.
இந்த மீறலுக்கான தண்டனையானது இரண்டு வருடம் அந்த வீரர் தடை செய்யப்படுவார். மேலும், விளையாட்டு வீரரின் குற்றத்தின் அளவைப் பொறுத்து குறைந்தபட்சம் ஒரு வருடமாக குறைக்கப்படும்.
பதிவுசெய்யப்பட்ட சோதனைக் குழுவில் (RTP) உள்ள விளையாட்டு வீரர்கள் தங்களுடைய இருப்பிடம், பயிற்சியின் முகவரிகள், வேலை மற்றும் பிற வழக்கமான செயல்பாடுகள், அவற்றின் தொடர்புடைய காலக்கெடுவுடன் விரிவான விவரங்களை வழங்க வேண்டும். இத்தகைய விதியை அவர் முழுமையாக பின்பற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, சீமா பிஸ்லா மீது நடவடிக்கை எடுத்துள்ள ஊக்கமருந்து தடுப்பு ஒழுங்கு குழு, அவருக்கு ஒரு ஆண்டு எந்தவொரு போட்டியிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது. ஏற்கனவே, இவரது தடை காலம் கடந்த மே 12ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டு விட்டதால், அதிலிருந்தே கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீமா பிஸ்லா NADA - RTP பட்டியலில் ஆண்டின் 2 ஆம் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தன்னை பற்றிய விவரங்களை தெரிவித்திருந்தார். ஆனால் Q3 (ஜூலை முதல் செப்டம்பர் வரை) பட்டியலில் குறிப்பிடவில்லை. அதனால்தான் இந்த நடவடிக்கை என்று NADA அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2021 ம் ஆண்டு கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 50 கிலோ மகளிர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் சீமா வெண்கலப் பதக்கம் வென்றார். அதே ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் 50 கிலோ எடைப்பிரிவில் தொடக்க சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். சீமாவின் தோல்வியின் சரியான தன்மை குறித்து இதுவரை அவர் வெளியிடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
வினேஷ் போகட்டுக்கும் நோட்டீஸ்:
கடந்த மாதம் உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவரும், ஆசிய சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றவருமான வினேஷ் போகட்டுக்கு தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (NADA) நோட்டீஸ் அனுப்பியது. NADA அதிகாரி அவரது இல்லத்திற்குச் சென்றபோது அவர் இல்லாதது குறித்து நோட்டீஸ் கொடுத்திருந்தார். இதற்கு 14 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு வினேஷிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வினேஷ் போகட் கடந்த டிசம்பர் 2022 முதல் பதிவுசெய்யப்பட்ட சோதனைக் குழுவின் (RTP) ஒரு பகுதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.