IPL 2021: IPL தொடரில் இருந்து ‘யார்க்கர் கிங்’ நடராஜன் விலகல்? ஏன்? - ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் இருந்து நடராஜன் விலகியதால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
‘யார்க்கர் கிங்’ நடராஜன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் லீக் ஆட்டங்கள் சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்று வருகின்றன. இந்த சீசனில் 15 லீக் போட்டிகள் முடிந்துள்ளன.
இந்தத் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. லேசான காயத்தால் அவர் விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில், நடராஜனுக்கு கால் மூட்டில் ஏற்பட்ட காயத்தால், அவர் நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடராஜன் விலகியுள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜன் யார்க்கர் பந்துகளை வீசி தோனி, கோலி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்த தொடரின் மூலமே நடராஜனின் பந்துவீச்சு திறமை வெளி உலகுக்கு தெரியவந்தது. அவரின் திறமையை அறிந்த, ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து அவரை மெருகேற்ற செய்தார்.
ஐபிஎல் தொடரில் ஜொலித்த காரணத்தால், நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். அது நெட் பவுலராக. ஆனால், சில வீரர்களின் காயத்தால், அவருக்கு T20, ஒருநாள் மற்றும் டி20 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே வீரர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.