UPW-W vs GG-W: கடைசி கட்டத்தில் ஹர்லீன், ஹேமலதா அதிரடி..! முதல் வெற்றியை பெறுமா குஜராத்..?
டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக ஆடிய ஹர்லீன் தியோல் 32 பந்துகளில் 46 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
ஐபிஎல் தொடருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து, மகளிருக்கான டி-20 பிரிமியர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் மகளிர் பிரிமியர் லீக்கில் மொத்தம் ஐந்து அணிகள் போட்டியிடுகின்றன. மும்பை இந்தியன்ஸ் (MI), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB), டெல்லி கேபிடல்ஸ் (DC), UP வாரியர்ஸ் (WPW) மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் (GG).
தொடரின் இரண்டாவது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடைபெற்றது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது டெல்லி. பெங்களூரை 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் உத்தரப்பிரதேசம் - குஜராத் அணிகள் மோதின.
பெரும் எதிர்பார்ப்பு:
உத்தரப்பிரதேச அணியை பொறுத்தவரை கேப்டன் அலிசா ஹீலி, துணை கேப்டன் தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரி, சோபி எக்லெஸ்டன், ஷப்னிம் இஸ்மாயில், தாலியா மெக்ராத், ராஜேஸ்வரி கெய்க்வாட், உள்ளிட்டோர் சிறந்த பார்மில் இருக்கினர்.
அதேசமயம் குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி, ஹர்லீன் தியோல், ஆஷ்லி கார்ட்னெர், சோபியா டங்லி, அனபெல் சதர்லேண்ட், சினே ராணா, ஹேமலதா என சிறந்த வீராங்கனைகள் இருப்பதால் இந்த போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதிரடி காட்டிய தியோல்:
டாஸ் வென்ற குஜராத் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக ஆடிய ஹர்லீங் தியோல் 32 பந்துகளில் 46 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார். மற்றவர்கள் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் தங்களால் முடிந்த வரை ரன்களை சேர்த்தனர்.
மேக்னா, 15 பந்துகளில் 24 ரன்களும் கார்ட்னர், 19 பந்துகளில் 25 ரன்களையும் ஹேமலதா, 13 பந்துகளில் 21 ரன்களையும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது குஜராத். உத்தர பிரதேச அணியில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளும் சோபி எக்லெஸ்டன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
170 ரன்கள் எடுத்தால் வெற்றி என கடின இலக்கை நோக்கி களம் இறங்கியுள்ளது உத்தர பிரதேசம் வாரியஸ் அணி.
தொடரின் முதல் போட்டி:
மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மாபெரும் வெற்றியுடன் இந்த சீசனை மும்பை அணி தொடங்கியது.