இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்னாகும்? கட் ஆஃப் நேரம் என்ன? கோப்பை குஜராத் அணிக்கு செல்லுமா? விதிகள் சொல்வது இதுதான்!
'அக்குவெதர்' வானிலை கணிப்புகளின்படி, சுற்றுச்சூழலில் 56% மேக மூட்டம் காணப்படலாம் மற்றும் மாலையில் 61% மழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது.
குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) ஐபிஎல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து, இன்று (மே 28, ஞாயிற்றுக்கிழமை), அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸுடன் (சிஎஸ்கே) மோதுகிறது.
ஐபிஎல் இறுதிப்போட்டி
ஹர்திக் பாண்டியா தனது முன்னாள் அணியை பெரிய ரன் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டியில் தங்களது ஸ்லாட்டை உறுதி செய்தனர். இதனால் மீண்டும் குரு - சிஷ்யன் போட்டி இந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் உண்டாகியுள்ளது. இம்முறை வென்றால் சென்னை அணிக்கு இது 5வது கோப்பையாக மாறும். இதன் மூலம் அதிக கோப்பைகள் வென்ற மும்பை அணியை சமன் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கடந்த முறை சாம்பியன் ஆன குஜராத் அணி மீண்டும் வென்றால் அந்த அணிக்கு அது இரண்டாவது கோப்பையாக அமையும். அதோடு அந்த அணி உள்ளே வந்ததில் இருந்து, வேறு எந்த அணிக்கும் கோப்பை செல்லாமல் இருக்கும் இரண்டாவது ஆண்டாக இது தொடரும்.
குஜராத் அணியின் ஹோம் கிரவுண்ட் என்றாலும் சென்னை அணிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதால் ஹோம் கிரவுண்ட் பிரச்சனை எல்லாம் வருவதற்கு வாய்பில்லை. இரு அணிகளும் இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் மோதியுள்ள நிலையில், ஒன்றில் குஜராத் அணியும், ஒன்றில் சென்னை அணியும் வென்றுள்ளது. இதிலும் இரண்டு அணிகளும் சமமான வாய்ப்புகளையே பெறுகின்றன.
CSK vs GT ஃபைனல் நடக்காவிட்டால் என்ன ஆகும்?
அதுமட்டுமின்றி வீரர்கள் மற்றும் அவர்களை பயன்படுத்தும் விதங்களிலும் சில ஒற்றுமைகள் உள்ளன. இப்படி இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையில், அனைவர் மனதிலும் ஓடிக்கொண்டிருப்பது, குஜராத் மற்றும் மும்பை இடையேயான குவாலிபையர் 2 மோதலுக்கு சற்று முன்பு அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் பெய்த மழைதான். இன்றும் அதே மைதானம் என்பதால், மழை வந்து ஆட்டம் நின்றால், CSK vs GT இறுதிப் போட்டி கைவிடப்பட்டால் கோப்பை யாருக்கு கிடைக்கும், எப்படி கிடைக்கும்? இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் கூறியுள்ள நிபந்தனைகளைப் பார்ப்போம்.
மழை வாய்ப்பு
'அக்குவெதர்' வானிலை கணிப்புகளின்படி, சுற்றுச்சூழலில் 56% மேக மூட்டம் காணப்படலாம் மற்றும் மாலையில் 61% மழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது. இறுதிப் போட்டியின் போது 48% ஈரப்பதத்துடன் வானிலை இருக்கும் என்று 'பிபிசி வெதர்' கணித்துள்ளது. துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது மழை வந்து விளையாட்டு பாதிக்கப்பட்டால், ஒரு ரிசர்வ் டே கிடைக்கும். அதாவது அடுத்த நாள் மே 29 அன்று இரவு 8.00 மணிக்கு போட்டி மீண்டும் தொடங்கும். அன்று போட்டி முதலில் இருந்து தொடங்காமல் முதல் நாளில் விட்ட இடத்தில் இருந்து துவங்கும்.
ஒரே ஒரு ஓவராவது நடத்தப்படும்
அதோடு முதல் நாள் மற்றும் ரிசர்வ் நாள் இரண்டிற்கும் கூடுதலாக 120 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான போட்டிகளுக்கு கட் ஆஃப் நேரம் இரவு 10.26 ஆகும். அந்த நேரத்தில் மழை நின்றால் ஐந்து ஓவர் போட்டி நடத்தலாம். ஆனால் அதை தாண்டினால் ஆட்டம் நிறுத்தப்படும். ஆனால் இறுதிப்போட்டிக்கு அந்த நேரம் இரவு 12.26 வரை இருக்கும். இதே நேரம்தான் ரிசர்வ் நாளுக்கும். இது தவிர, தேவைப்பட்டால், ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும், இதனால் ஒவ்வொரு அணியும் குறைந்தது ஐந்து ஓவர்கள் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும். முதல் நாளில் (மே 28) போட்டி தொடங்கப்பட்டிருந்தால் (குறைந்தது ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் கூட), அடுத்த நாளில் (மே 29) ஆட்டம் விட்ட இடத்தில் இருந்ததுதான் துவங்கும். ஒருவேளை டாஸ் மட்டும் போட்டு, அணிகள் தங்கள் பிளேயிங் லெவனை அறிவித்து, பேட்டிங் அல்லது பவுலிங் என்று முடிவு செய்த பிறகு, ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் அடுத்த நாளைக்கு மாற்றபட்டால் மீண்டும் முதலில் இருந்து டாஸ் போடுவார்கள். அணிகள் தங்கள் முடிவுகளை, பிளேயிங் லெவனை மாற்றிக்கொள்ளலாம். இரண்டு நாள் முழுவதும் மழையாக பெய்து, ஐந்து ஓவர்கள் கொண்ட போட்டி கூட நடத்த முடியாத பட்சத்தில், அதிகாலை 1.20 மணிக்கு, இறுதிப் போட்டி ஒரே ஒரு சூப்பர் ஓவராக மாற்றப்படும். அந்த ஒரு ஒவரையும் நடத்த முடியாமல் போனால் என்னாகும்? குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும். புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணிக்கு கோப்பை என்பது விதிமுறை.
இந்த ஐபிஎல் குறித்த அனைத்து விஷயங்களையும் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்!