RCB vs SRH, 1st Innings Highlights: ஐதராபாத்தின் கிளாசென் மிரட்டல் சதம்..ப்ரூக் பினிஷிங் டச்..பெங்களூருவிற்கு 187 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடர்:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் இறுதிகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் லீக் சுற்று முடிவடையவுள்ளது. களமிறங்கிய 10 அணிகளில் ஏற்கனவே டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்து விட்டன. அதேநேரம், குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே, இதுவரை அதிகாரபூர்வமாக பிளே-ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பெங்களூரு - ஐதராபாத் மோதல்:
இந்த சூழலில் இன்று நடைபெறும் தொடரின் 65வது லீக் போட்டியில், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதியுள்ளது.. ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் போட்டியில், டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆரம்பமே சொதப்பல்:
ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்று ராகுல் திரிபாதி ஆகிய இருவருமே ரன் சேர்க்க திணறினர். இதனால், பிரேஸ்வெல் வீசிய போட்டியின் 5வது ஓவரில், அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், திரிபாதி 15 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால், 28 ரன்களை சேர்ப்பதற்குள் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.
பொறுப்பான கூட்டணி:
3வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் மற்றும்கிளாசென் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக கிளாசென் ஆரம்பம் முதலே அதிரடியாக பவுண்டரிகளையும் , சிக்சர்களையும் விளாசினார். இந்த கூட்டணி 29 பந்துகளில் 50 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிளாசென், 24 பந்துகளிலேயே நடப்பு தொடரில் தனது 3வது அரைசதத்தை பதிவு செய்தார். இதனிடையே நிதானமாக விளையாடி வந்த மார்க்ரம், 18 ரன்களை சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார். இந்த கூட்டணி 3வது விக்கெட்டிற்கு 76 ரன்களை குவித்தது.
இறுதியில் அதிரடி:
5வது விக்கெட்டிற்கு கிளாசெனுடன் ஜோடி சேர்ந்த, ஹாரி ப்ரூக் தனது பங்கிற்கு அதிரடி காட்டினார். இருவரும் சேர்ந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால், ஐதராபாத்தின் ரன் கிடுகிடுவென உயர்ந்தது. தொடர்ந்து, அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளாசென், 49 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். பின்பு, 104 ரன்கள் சேர்த்து இருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார். இதில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் அடங்கும்.
பெங்களூரு அணிக்கு இலக்கு:
இதனால், 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது. இந்த இலக்கை பெங்களூரு அணி எட்டுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.