Shahrukh khan: ஃபினிஷிங்கில் பின்னியெடுத்த ஷாருக்..! பஞ்சாப்பை காப்பாற்றிய தமிழன்..!
அணியில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஃபினிஷர் ரோலை கச்சிதமாக செய்து முடித்து அணியின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளார். அவர் வெறும் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 23 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2023 சீசனில் நேற்றிரவு இரண்டு போட்டிகள் நடந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் லக்னோ அணியை பஞ்சாப் அணி வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியது. ஏனென்றால் அணியின் தலைவர் ஷிகர் தவான் இல்லாத நிலையில், அனுபவமில்லாத சாம் கரன் தலைமையில் அணி ஆடியது. முக்கிய தொடக்க ஆட்டகாரரான ஷிகர் தவான் இல்லாமல் பஞ்சாப் களமிறங்கி அதகளம் செய்துள்ளது. இந்த போட்டியில் ஃபினிஷிங் ரோலை கையில் எடுத்து பஞ்சாப் அணிக்காக வெற்றிகரமாக முடித்து கொடுத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷாருக்கான்.
சொதப்பிய லக்னோ பேட்டிங்
டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய லக்னோ அணியின் கேப்டன் ராகுல் ஒருபக்கம் நிலைத்து ஆட, மறுபுறம் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சென்றுகொண்டிருந்தன. விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்ததால் ராகுலால் அதிரடியை காட்டவும் முடியாமல் ஒட்டுமொத்தமாக 159 ரன்களை மட்டுமே குவித்து 8 விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி, அவர்களது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இல்லாததால், அதர்வா டெய்டே என்னும் புதிய வீரருடன் களம் கண்டது. அவர் முதல் ஓவரிலேயே மற்றொரு அறிமுக பந்துவீச்சாளர் யுத்வீர் சிங்கின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க, மீண்டும் 3வது ஓவரை வீசிய யுத்வீர் சிங் அடுத்த விக்கெட்டை சாய்ந்தார்.
சரிந்த பஞ்சாப் பேட்டிங்
நல்ல ஃபார்மில் இருந்த பிரப்சிம்ரன் சிங்கை வீழ்த்தினார். லக்னோ அணி போலவே பஞ்சாபும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை விட, மேத்யூ ஷார்ட் கொஞ்ச நேரம் நிலைத்து ஆடினார். அதன் பிறகு வந்த சிக்கந்தர் ராஸா அணியை வழிநடத்தி சென்றார். அரை சதம் கடந்த அவர் முக்கியமான கட்டத்தில் ஆட்டமிழக்க, இலக்கை எட்டும் பணி தமிழக வீரர் ஷாருக்கானை வந்து சேர்ந்தது. சாம் கரனும், ஜிதேஷ் ஷர்மாவும் ஆட்டமிழந்த நிலையில், அவர் மட்டுமே ஒரே ஒரு பேட்ஸ்மேனாக களத்தில் நின்றார். எதையும் பார்க்காமல் வந்து நின்ற முதல் பந்தே சிக்ஸருக்கு விரட்டி நம்பிக்கை அளித்தார். அதனால் அவர் முடித்துக் கொடுப்பார் என்று சாம் கரண் முதல் ப்ரீத்தி ஜிந்தா வரை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
முடித்துக் கொடுத்த ஷாருக்கான்
ஆனால் அற்புதமாக பந்து வீசிய எல்எஸ்ஜி அணியின் ரவி பிஷனோய் மற்றும் மார்க் உட் ரன்கள் சேர்க்கவே விடவில்லை. 19வது ஓவரில் மார்க் உட்டின் பவுன்சரை பேட்டில் லேசாக தொட, அது வந்த வேகத்திற்கு சிக்ஸருக்கு சென்றது. அதுவே ஆட்டத்தை மேலும் எளிதாக்கியது. கடைசி ஓவரை பிஷ்னோய் வீச, 7 ரன் தேவைப்பட்ட நிலையில், பவுண்டரிகளுக்காக முயற்சி செய்த ஷாருக்கானுக்கு முதல் இரண்டு பந்துகளிலுமே 4 ரன்கள் மட்டுமே ஓடி எடுக்க முடிந்தது. அடுத்த பந்தை பவுண்டரிக்கு விளாசி வெற்றியை பெற்றுத்தந்து துள்ளி குதித்தார் ஷாருக்கான்.
மிளிரும் தமிழக வீரர்
அணியில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஃபினிஷர் ரோலை கச்சிதமாக செய்து முடித்து அணியின் நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளார். அவர் வெறும் 10 பந்துகளை மட்டுமே சந்தித்து 23 ரன்கள் குவித்தார். அதில் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். தமிழக வீரரான இவர் கடந்த ஆண்டும் பஞ்சாப் அணிக்காக இதே இடத்தில் ஆடியுள்ளார். கடைசியில் வந்து 20, 30 ரன்கள் தேவையை பூர்த்தி செய்யும் வேலையை இதுவரை கச்சிதமாக செய்து வந்துள்ள இவர், நேற்று இக்கட்டான சூழலில் போட்டியை வென்று பலரது பார்வைக்கு வந்துள்ளார்.
இப்படி தமிழ்நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிக்க துவங்கி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. போட்டிக்கு பின் பேட்டி அளித்த ஷாருக்கான், ஷிகர் தவான் ஆறு மாதங்கள் முன்பே போன் செய்து தயாராகும்படி கூறியதாகவும், கண்டிப்பாக அணியில் இடம் உண்டு என்று கூறியதாகவும் அவருடைய ஆதரவு குறித்து பேசியிருந்தார். மேலும் பல வெற்றிகளை தமிழ்நாட்டு வீரர்கள் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம், அதற்கேற்ப வீரர்கள் தங்களை வெளிக்காட்ட காத்திருக்கின்றனர்.
மேலும் நேற்றைய போட்டியில் 2 கடினமான கேட்ச் உள்பட 3 கேட்ச்களை ஷாருக்கான் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.