RUTHRAJ CENTURY : "சதம் முக்கியமில்லை, அணிதான் முக்கியம்" - ருத்ரதாண்டவம் ஆடிய ருதுராஜ்
சதம் அடிப்பது முக்கியமில்லை அணியின் ஸ்கோர்தான் முக்கியம் என்று ருதுராஜ் கெய்க்வாட் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கி ஆட்டத்தின் கடைசி பந்தை சிக்ஸருடன் முடித்து தனது முதலாவது சசதத்தை நிறைவு செய்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் கடந்த பிறகு அதிரடியாக ஆடினார். அவர் 18வது ஓவரிலே 93 ரன்களை அடித்துவிட்டார். இரண்டு ஓவர்களில் அவரது சதத்திற்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், மறுமுனையில் இருந்த ஜடேஜா அவருக்கு வாய்ப்பு அளிக்காமல் 19வது ஓவர் முழுவதும் அதிரடியாக ஆடினார். கடைசி ஓவரில் ருதுராஜின் சதத்திற்கு 6 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது.
ஆனால், ஜடேஜா முதல் பந்தில் பவுண்டரி, இரண்டாவது பந்தில் சிக்ஸர், மூன்றாவது பந்தில் பவுண்டரி என்று மூன்று பந்துகளில் அதிரடி காட்டி நான்காவது பந்தில் சிங்கிள் எடுத்தார். ருதுராஜின் சதத்திற்கு இரண்டு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 5வது பந்தில் ருதுராஜ் ரன் எடுக்கவில்லை. இதனால், ஒரு பந்தில் ருதுராஜின் சதத்திற்கு 6 ரன்கள் தேவைப்பட்டது.
இந்த நிலையில், முஸ்தபிஷிர் ரஹ்மான் வீசிய கடைசி பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து தனது முதலாவது ஐ.பி.எல். சதத்தை ருதுராஜ் நிறைவு செய்தார். மேலும், இந்த தொடரில் முதலாவது சதத்தை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார். சதத்திற்கு பிறகு பேட்டி அளித்த ருதுராஜ் கெய்க்வாட், சதம் அடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அணியின் ரன்கள்தான் முக்கியம் என்று கூறினார்.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் தனது அதிக ரன்களை பதிவு செய்ததுடன் இந்த தொடரில் முதல் ஆளாக 500 ரன்களை கடந்து அதிக ரன்களை அடிக்கும் வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் ருதுராஜ் கெய்க்வாட் கைப்பற்றினார்.