Watch Video : இதென்னடா ஆச்சரியம்..! கோலியை கட்டிப்பிடித்த கம்பீர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
RCB Vs KKR, IPL: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிவில், விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டி அணைத்த விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
RCB Vs KKR, IPL: பல்வேறு சூழலில் மோதலில் ஈடுபட்டு வந்த விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர், சிரித்து பேசியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலியை அணைத்த கம்பீர்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரும் வழக்கம்போல், பரபரப்பிற்கு பஞ்சமின்றி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி, நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 2015ம் ஆண்டுக்குப் பிறகு ஒருமுறை கூட உள்ளூர் மைதானத்தில் கொல்கத்தா அணியை, பெங்களூர் வீழ்த்தியதில்லை என்ற மோசமான சாதனையை தொடர்கிறது. அதேநேரம், போட்டியின் முடிவில் கோலி மற்றும் கம்பீர் கட்டி அணைத்த சம்பவம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Our favourite strategic timeout ever 🫂#IPLonJioCinema #RCBvKKR #TATAIPL #JioCinemaSports pic.twitter.com/A50VPhD6RI
— JioCinema (@JioCinema) March 29, 2024
கோலியுடன் அன்பை பகிர்ந்த கம்பீர்:
இதுதொடர்பான வீடியோவில், போட்டியின் முடிவில் கைகொடுக்க வந்த கோலியை கம்பிர் அணைத்தார். தொடர்ந்து புன்னகைத்தபடி சில வார்த்தைகளை கூற, கோலியும் கம்பீரின் தோல் மீது கைபோட்டு மகிழ்ச்சியுடன் சில வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுதொடர்பாக வர்ணனை பெட்டியில் இருந்த முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பேசுகையில், கம்பீரின் இந்த அணைப்புக்காக கொல்கத்தா அணிக்கு ஃபேர் பிளே விருதை கொடுக்கலாம் என்றார். ஆனால், மற்றொரு முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரோ, ஃபேர் பிளே விருது போதாது, ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என நகைச்சுவையுடன் தெரிவித்துள்ளார்.
முட்டலும், மோதலும்:
கோலி மற்றும் கம்பீருக்கு இடையேயான முட்டல், மோதல் என்பது பல ஆண்டுகளாக கிரிக்கெட் களத்தில் தொடர்ந்து வருகிறது. பல இடங்களில் கோலியை பற்றி கம்பீர் விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு கம்பீர் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்தபோது கூட, கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அது பெரும் சர்ச்சையானது. அண்மையில் பேட்டி ஒன்றில் பேசும்போது கூட, “தான் கனவில் கூட வீழ்த்த நினைக்கும் ஒரு அணி என்றால் அது ஆர்சிபி தான். அவர்கள் எதையுமே வெல்லவில்லை, ஆனால் எல்லாவற்றையும் வென்றதை போல செயல்படுகின்றனர். இதுபோன்ற அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என பேசி இருந்தார். இந்த சூழலில் கோலி மற்றும் கம்பீர் ஆகிய இருவரும், போட்டியின் முடிவில் சிரித்து பேசியது ரசிகர்களை ஆச்சரியப்பட செய்துள்ளது.