PBKS vs RR IPL 2023: தொடரில் இருந்து முற்றிலும் வெளியேறிய பஞ்சாப்; 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி..!
PBKS vs RR IPL 2023: ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பஞ்சாப் அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள அழகான மைதானமான தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக் கொண்டன. பஞ்சாப் அணியைப் பொறுத்தமட்டில் ப்ளேஆஃப்க்கான வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்து விட்டது. ஆனால் ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டியில் வெற்றி பெறுவதுடன் மற்ற அணிகளின் போட்டி முடிவுகள் சாதகமாக இருக்கும் பட்சத்தில் ராஜஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதனால், இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் எனும் முனைப்போடு ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறாங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் மிகச் சிறப்பாக அமைய வில்லை. இந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக சதம் விளாசிய ப்ரப்சிம்ரன் இரண்டு ரன்கள் சேர்த்த நிலையில் போட்டியின் முதல் ஓவரை வீசிய போல்ட்டிடமே கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன் பின்னர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 50 ரன்களை எட்டியதும் 4வது விக்கெட்டை இழந்தது.
அதன் பின்னர் கைகோர்த்த சாம் கரன் மற்றும் ஜிதேஷ் சர்மா ஜோடி பொறுப்புடன் விளையாடியது. இதனால் பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. மேலும், 39 பந்தில் இந்த ஜோடி 50 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் அதிரடியாக பவுண்டரிகளும் சிக்ஸரும் விளாசிய ஜிதேஷ் சர்மா 14வது ஓவரின் 4வது பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
16 ஓவர்களில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. களத்தில் சாம் கரன் மற்றும் ஷாரூக் கான் இருந்தனர். இவர்கள் இருவரும் பஞ்சாப் அணியை மேற்கொண்டு விக்கெட்டுகள் இழக்காமல் பார்த்துக்கொள்வதுடன் சவாலான ஸ்கோரை எட்டவேண்டிய பொறுப்பு இருந்தது. இதனால் இருவரும் கவனமாக ஆடினர். இறுதியில் அதிரடி காட்டிய இவர்களால் பஞ்சாப் அணி கடைசி 4 ஓவர்களில் 72 ரன்கள் சேர்த்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 187 ரன்கள் சேர்த்தது.
அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பட்லர், சஞ்சு சாம்சன் சொதப்ப, இளம் வீரர்களான ஜெய்ஸ்வால், படிக்கல் அரை சதத்தினால் ராஜஸ்தான் அணி நெருக்கடியில் இருந்து மீண்டது. மிடில் ஓவரில் இறங்கிய ஹிட்மயர் அதிரடியாக ஆட ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை எளிதில் எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் தனது விக்கெட்டை இழக்க ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இறுதி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் ராஜஸ்தான் அணி 4 பந்துகளை எதிர்கொண்டு 10 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. போட்டியின் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், பஞ்சாப் அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது.