(Source: ECI/ABP News/ABP Majha)
PBKS vs GT Innings Highlights: சாய் கிஷோர் மாயாஜால சுழல்; குஜராத் அணிக்கு 143 ரன்கள் இலக்கு!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 21) சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன.
டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.
இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் விக்கெட்டை பறிகொடித்தார். அந்தவகையில் மொத்தம் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 35 ரன்கள் எடுத்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
4 விக்கெட்டுகளை வீழ்த்திய சாய் கிஷோர்:
பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்கத்தில் வேகமாக ரன்களை சேர்த்த அந்த அணி ஒரு கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் அதிரடியாக விளையாடினார்கள்.
அப்போது ஹர்ப்ரீத் ப்ரார் 29 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கள் உள்ளது. குஜராத் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.