MI IPL Final: நியாபகம் இருக்கா?.. ஒரு ரன்னில் கோப்பையை விட்ட சென்னை, வெச்சுசெய்த மும்பை அணி..!
ஐபிஎல் தொடரில் கடந்த 2019ம் ஆண்டில் இதே நாளில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடரில் கடந்த 2019ம் ஆண்டில் இதே நாளில் தான், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
”ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் கண்ட தொடர் தோல்விகளுக்கு, மும்பை அணியை நிச்சயம் இன்று தோனியின் படை பழிவாங்கிவிடும் என ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களுமே எதிர்பார்த்து இருந்த தருணம். 2019 மே 12ம் தேதி நள்ளிரவு 11.30 மணி அளவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து இருந்தாலும், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானமே மயான அமைதியில் நிலைத்து இருந்தது. கடைசி பந்தில் தனது துல்லியமான யார்க்கரால் ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் கனவையும், சுக்கு நூறாக உடைத்து மும்பையை நான்காவது முறையாக சாம்பியனாக மாற்றினார் லசித் மலிங்கா ”
சென்னை - மும்பை:
அதிரடியான கிரிக்கெட் தொடர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது ஐபிஎல் தொடர் தான். ஆனால், அந்த தொடருக்கே அடையாளம் என்றால் அது மும்பை மற்றும் சென்னை அணிகள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இரு அணிகளும் அந்த அளவிற்கு வெற்றிகளை குவித்து கோலோச்சுவதுடன், கோடிக்கணக்கான ரசிகர்களையும் கொண்டுள்ளது. இந்த இரு அணிகளும் மோதும் போட்டிக்கு, வேறு எந்த போட்டிக்கும் கிடைக்காத அளவிற்கு டிஆர்பி ரேட் எகிறும். ஐபிஎல் தொடரின் எல்-கிளாசிகோ என அழைக்கப்பட்டாலும், சென்னை அணி உடனான போட்டியில் மும்பையின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. அதற்கு ஒரு உதாரணம் தான் 2019ம் ஆண்டு இறுதிப்போட்டி
2019ம் ஆண்டு இறுதிப்போட்டி:
2019ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஏற்கனவே 2013 மற்றும் 2015ம் ஆண்டு இறுதிப்போட்டிகளில் மும்பையிடம் கண்ட தோல்விக்கு, பழிவாங்கும் நோக்கில் சென்னை அணி களமிறங்கியது. அதற்கு ஏற்றார்படியே மும்பைக்கு ரோகித் சர்மா, டி-காக் கூட்டணி நல்ல தொடக்கத்தை தந்தாலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் பொல்லார்ட் மட்டும் தனித்து நின்று அதிரடி காட்ட, 25 பந்துகளில் 41 ரன்களை குவித்தார். இதன் மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 149 ரன்களை மட்டுமே சேர்த்தது. 150 ரன்கள் என்ற இலக்கை சென்னை அணி எளிதில் வெற்றி பெற்று விடும் ரசிகர்கள் நம்பிக்கையுடன், வெற்றிக்கு முன்னதாகவே கொண்டாட தொடங்கினர்.
சரிந்த சென்னை விக்கெட்டுகள்:
அதற்கு ஏற்றார் போல சென்னை அணியின் தொடக்க வீரரான டூப்ளெசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தாலும், சக வீரராக வாட்சன் நிலைத்து நின்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும், ரெய்னா, ராயுடு மற்றும் தோனி ஆகியோர் வெறும் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தர். கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற வெறும் ஒன்பது ரன்களே தேவைப்பட்டது.
மலிங்கா மிரட்டல்:
அந்த போட்டியில் தான் வீசிய முதல் 3 ஓவர்களில் 40 ரன்களை கொடுத்து இருந்தார் மலிங்கா. இருப்பினும் அவரது அனுபவத்தை நம்பி அவரிடமே பந்தை தந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி, முதல் பந்துகளில் வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுக்க, நான்காவது பந்தில் சென்னையின் நம்பிக்கையான வாட்சன் 80 ரன்கள் எடுத்து இருந்தபோது ரன் - அவுட்டானார். 5வது பந்தில் ஷர்துல் தாக்கூர் 2 ரன்களை எடுத்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டபோது, மலிங்கா வீசிய துல்லியமான யார்க்கரில் எல்பிடபள்யூ முறையில் ஷர்தூல் ஆட்டமிழந்தார். இதனால், பரபரப்பான இறுதிப் போட்டியில் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியதோடு, ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி கோப்பையை கைப்பற்றியது.
இதேபோன்று, 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியிலும் வெறும் 129 ரன்களை மட்டுமே குவித்து, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்று கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.