Rohit Sharma: ’வருத்தத்தில் இருக்கும் மும்பை ரசிகர்களுக்கு..’ எளிதில் முடிவுக்கு வரக்கூடியதா கேப்டன் ரோகித்தின் சாம்ராஜ்யம்?
Rohit Sharma: ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெற்றி பெறச் செய்தார்.
ஒட்டுமொத்த மைதானமும் பரபரப்பாக திக் திக் மனநிலையில் இருக்கும்போது, தனது அணியில் உள்ள ஒவ்வொரு வீரரையும் நம்பி களத்தில் எதிரணிக்கு பயத்தை உருவாக்கி, இறுதியில் தனது வலது கையின் ஆள்காட்டி விரைலை நீட்டிக்கொண்டும் இடது கையில் தனது தொப்பியை எடுத்துக்கொண்டு மைதானத்திற்குள் கத்திக்கொண்டு ஓடும் ரோகித் சர்மாவை ரசிக்காத ரசிகர்களே இல்லை. இன்னொரு முறை கேப்டன் ரோகித் சர்மாவை அப்படி பார்க்கமாட்டோமா? என ஏங்கும் ரசிகர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால் இனி அது அப்படி நடக்க வாய்ப்பே இல்லை. காரணம், மும்பை இந்தியன்ஸ் அணி ஹிட் மேன் ரோகித் சர்மாவிடம் இருந்த கேப்டன்சியை ஹர்திக் பாண்டியாவிற்கு மடை மாற்றிக் கொடுத்ததுதான். இதனை சற்றும் எதிர்பார்க்காத மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் ரோகித் சர்மா ரசிகர்களும் மும்பை அணிக்கு தங்களது கண்டனங்களையும் வருத்தத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
ஒரு அணியின் கேப்டன்சியை ஒரு வீரரிடம் இருந்து இன்னெரு வீரர்வசம் ஒப்படைப்பது என்பது கிளப் கிரிக்கெட் மட்டுமல்ல கிளப் விளையாட்டுகள் அனைத்திலும் சாதாரணமான விஷயம்தான். இது குறித்து தெரியாமல் கிளப் போட்டிகளைப் பார்ப்பவர்கள் எண்ணிக்கை என்பது சொற்பமாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுக்கப்பட்டது குறித்து இவ்வளவு அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்புவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? கேப்டன் கூல் என போற்றப்படும் தோனியின் கேப்டன்சி கூட ஜடேஜா வசம் கொடுக்கப்பட்டதே! அப்படி இருக்கும்போது ரோகித்திடம் இருந்து ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டதில் என்ன சிக்கல் என சிலர் கேள்வி கேட்கலாம். ஆனால் இவற்றுக்கெல்லாம் பதில் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து 2023ஆம் ஆண்டு வரை தெரிந்துகொள்ள வேண்டும்.
ரோஹித் ஷர்மா வசம்வந்த கேப்டன்சி கதை
2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கி அனைத்து அணிகளும் ப்ளேஆஃப் சுற்றினை நோக்கி மும்முரமாக நகர்ந்து கொண்டு இருந்தநேரம். 2013 ஐபிஎல் லீக் தொடரும்போது மும்பை அணியின் கேப்டனாக இருந்தது ஆஸ்திரேலியாவுக்கு இரண்டு முறை தொடர்ந்து உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரிக்கி பாண்டிங். அவரது தலைமையில் மும்பை அணி முதல் 6 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருந்தது. 7வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக அதனது ஈடன் கார்டன் மைதானத்தில் களமிறங்க வேண்டும். அப்படியான சூழலில்தான் ரிக்கி பாண்டிங்கிடம் இருந்த கேப்டன்சி ரோகித் வசம் வந்தது. பாண்டிங் தானகவே கேப்டன்சியை துறக்க, தொடரின் நடுவில் யாரை தேர்வு செய்வது எனத் தெரியாமல் தவித்தது மும்பை அணி நிர்வாகம். அப்படியான நிலையில்தான் அணியின் 4வது வீரராக களமிறங்கும் ரோகித் சர்மா மீது நம்பிக்கை ஏற்பட்டு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத ரோகித் சர்மா கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அணியை வெற்றி பெறச் செய்தார். அவரது கேப்டன்சியில் அந்த தொடரில் மட்டும் இறுதிப் போட்டி உட்பட 10 போட்டியில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை அணி இரண்டு முறை கோப்பையை வென்ற இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனியின் தலைமையிலான சென்னை அணியை எதிர்த்து விளையாடியது. ஃபினிஷர் என வர்ணிக்கப்படும் தோனி இறுதிவரை களத்தில் இருந்தும் சென்னை அணி தனது மூன்றாவது கோப்பையை வெல்ல முடியாமல் போனது. அதற்கு முக்கிய காரணம் ரோகித்தின் கேப்டன்சி. சச்சின் தெண்டுல்கரை ஐபிஎல் தொடரில் கோப்பையுடன் வழி அனுப்பி வைத்த கேப்டன் ரோகித் சர்மா.
தோனிக்கே விபூதி அடித்த ரோகித் கேப்டன்சி
அதன் பின்னர் ரோகித் தலைமையிலான மும்பை அணி 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு என 5 முறை கோப்பையை வென்றது. இதில் 2013, 2015, 2019 ஆகிய ஆண்டுகள் தோனி தலைமையிலான சென்னை அணியை வீழ்த்தியே கோப்பையை வென்றது. 2017ஆம் ஆண்டு தோனி இருந்த புனே அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. ஆனால் சென்னை அணி இதுவரை ஒரு முறை கூட இறுதிப் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய வரலாறே இதுவரை கிடையாது. கேப்டன் கூல், ஃபினிஷர் தோனி என்பதெல்லாம் ரோகித்தின் கேப்டன்சியிடம் துளியும் எடுபடவில்லை.
ரோகித்தின் மும்பை அணிக்கு கோப்பையை வென்று கொடுத்ததும் பல அணிகள் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராக இருந்தது. அதிலும் பல அணிகள் ஏலத் தொகை மட்டும் இல்லாமல் தனிபட்ட முறையில் பார்ட்னர்ஷிப் பேச்சுகளில் எல்லாம் ஈடுபட்டது. ஆனால் ரோகித் சர்மா மும்பை அணியை தனது வீட்டைப்போல் கருதி அணியை உலகத் தரம் வாய்ந்த அணியாக உருவாக்கினார். ரோகித் சர்மாவால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பார்த்து பார்த்து உருவாக்கிய வீரர்கள்தான் இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணியில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு உள்ளவர்கள். அதாவது இவர்களை தயாரித்தது ரோகித் பட்டறை என்றே கூறலாம். அதாவது ரோகித் சர்மாவின் சாம்ராஜ்யத்தின் தளபதிகள். அவ்வகையில் உருவான தளபதிகள்தான் பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹார்திக் பாண்டியா, திலக் வர்மா, ராகுல் சஹார், குர்னால் பாண்டியா ஆகியோர். இவர்களோ அல்லது இவர்களினால் ஒருவரோ இந்திய கிரிக்கெட் அணியிலோ அல்லது ஐபிஎல் தொடரிலோ தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கும்வரை ரோகித் சர்மாவின் சாம்ராஜ்யம் தொடரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
இவர்கள் அனைவரும் சில நேரங்களில் ரோகித் சர்மாவின் விசுவாகள் என்பதை அவ்வப்போது போட்டிகளுக்கு இடையில் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அவர்களில் சூர்யகுமார் யாதவ் தனது தொடக்க காலங்களில் போட்டியை வென்ற பின்னர் மைதானத்தில் இருந்து கொண்டு ரோகித் சர்மாவை வணங்கும் வீடியோ ஐபிஎல் தொடங்கும் நேரத்தில் இன்றைக்கும் வைரல் மெட்டீரியல் வரிசைதான். இப்படியான அணியின் முக்கிய வீரராக இருந்த வீரர் ஹர்திக் பாண்டியா. இவர் கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லின்போது புதிதாக தொடங்கப்பட்ட குஜராத் அணிக்கு போவதாக மும்பை அணியிடம் கூறி விருப்பத்தின் பேரில் வெளியேறியவர். குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா குஜராத் அணிக்கு கோப்பையை வென்றுகொடுத்தார். இது கோப்பைக்காக பல ஆண்டுகளாக காத்துக்கொண்டு இருக்கும் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு குஜராத் அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றார் ஹர்திக் பாண்டியா. இதனை பலரும் மும்பை பட்டறை என்றால் சும்மாவா என்றெல்லாம் ஃபையர் விட்டுக்கொண்டு இருந்தார்கள் மும்பை ரசிகர்கள்.
இந்நிலையில்தான் மும்பை அணிக்கு மீண்டும் ட்ரேடிங் செய்யப்பட்டார் ஹர்திக் பாண்டியா. இதனை மும்பை அணியின் ரசிகர்கள் இணையமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு திருவிழா போல ட்ரெண்ட் செய்தார்கள். ஆனால் இன்றைக்கு ஹர்திக் பாண்டியாவிற்கு கேப்டன்சி கொடுக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் மும்பை அணியை பிந்தொடருவதை தவிர்கிறார்கள், இதனால் சென்னை அணி அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட அணியாக மாறியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மும்பை அணிக்கு கண்ணீர் அஞ்சலி பதிவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். பல ரசிகர்க்ள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பையை தீயிட்டுக் கொளுத்தி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் ரோகித் சர்மாவின் கேப்டன்சிதான். 2013 ஆம் ஆண்டின் பாதியில் ஒப்படைக்கப்பட்ட கேப்டன்சி. 2023ஆம் ஆண்டிற்குள் 5 முறை அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துவந்து 5 முறையும் கோப்பையை வென்றவர். எப்போதும் அணியின் நலனுக்காக முடிவுகள் எடுப்பதுடன் அணியில் அடுத்தகட்ட வீரர்களை உருவாக்குவதில் மிகவும் கவனமாக இருப்பவர். தனது சாதனைகளுக்காக ஒருபோதும் களமிறங்காத கேப்டன். ஐபிஎல் கேப்டன்களிலேயே அதிக விமர்சனங்களைச் சந்தித்த ஒரு கேப்டன் என்றால் அது ரோகித் சர்மா மட்டும்தான். எப்போதும் ரோகித் சர்மாவை கண்டபடி ட்ரோல் செய்து பதிவுகளை பகிரும் மற்ற அணிகளின் ரசிகர்கள் கூட இப்போது அவரை புகழ்ந்து பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஹர்திக் பாண்டியா மும்பை அணியை வழிநடத்த தகுதியானவர் அல்லது தகுதியற்றவர் என்ற பேச்சுக்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிகரமான கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா தன்னை எப்போதே நிரூபித்துவிட்டார். ரோகித்தின் 10 ஆண்டுகால கேப்டன்சி பயணத்தில் உருவாக்கப்பட்ட சிஷ்யன்களில் ஒருவர் ஹர்திக். குருவை மிஞ்சும் சிஷ்யனால் குருவுக்கு எப்போதும் பெருமிதம்தான். உணர்ச்சிவசப்பட்ட ரசிகர்கள்தான் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மும்பை ரசிகர்களுக்கும் சரி தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கும் சரி, அவர்களுக்கு இருக்கும் ஒரே ஆசை, மீண்டும் களத்தில் ரோகித் சர்மாவை மும்பை அணியின் கேப்டனாக பார்க்கவேண்டும். அவர் கேப்டனாக களமிறங்கும் போட்டியில் மைதானத்தில் அவர் பெயர் பதித்த ஜெர்ஸியை அணிந்து கொண்டு, ரோகித்.. ரோகித்.. எனவும் ஹிட் மேன் ஹிட் மேன் எனவும் முழக்கமிட்டு வானமே அதிரும் அளவிற்கு கரகோசம் எழுப்பி கேப்டனாக அவருக்கு விடை கொடுக்கவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இப்படியான ஆசையை மும்பை இந்தியன்ஸ் அணி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.