Mumbai Indians: ஹர்திக் கேப்டன்ஷி! என்ன நடக்கிறது மும்பை இந்தியன்ஸில்? முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கு அந்த அணியின் வீரர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் 2024:
ஐ.பி.எல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை நீக்கிவிட்டு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்ததை அந்த அணி வீரர்களே ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இது ரசிகர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது. 5 முறை கோப்பையை வென்ற அணி தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து இருப்பதால் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில் மும்பை அணிக்குள் நடக்கும் பனிப் போர் குறித்தும், ஹர்திக் பாண்டியா எந்த மனநிலையில் இருக்கிறார் என்பது குறித்தும் ஹர்பஜன் சிங் மற்றும் அம்பத்தி ராயுடு பேசியுள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் நடப்பது சரியில்லை:
இது தொடர்பாக ஹர்பஜன் சிங் பேசுகையில். "மும்பை இந்தியன்ஸ் அறையின் காட்சிகள் நன்றாக இல்லை. ஹர்திக் பாண்டியா தனித்து விடப்பட்டு இருக்கிறார். அந்த அணியின் வீரர்கள் அவரை கேப்டனாக ஏற்க வேண்டும், அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும். அந்த அணிக்காக நான் ஆடியவன் என்ற முறையில் சொல்கிறேன். அங்கே நடப்பது நன்றாக இல்லை" என்று கூறியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா சோகமாக இருக்கிறார்:
அதேநேரம் அம்பத்தி ராயுடு பேசுகையில், "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவரை குழப்பும் வகையில் அணியில் நிறைய பேர் உள்ளனர். டிரஸ்ஸிங் ரூமில் உள்ள பெரிய வீரர்கள் அவரை கேப்டனாக சுதந்திரமாக பணியாற்ற அனுமதிப்பதில்லை. எந்த கேப்டனுக்கும் இது நல்ல சூழ்நிலை இல்லை" என்றார்.
நவ்ஜோத் சிங் சித்து கூறுகையில், "ஹர்திக் பாண்டியா யாருடனும் பேச முடியாததால் மனமுடைந்து சோகமாக இருக்கிறார். அனைவரும் ஒன்றிணைந்து விளையாடும்போதுதான் அணி வெற்றிபெற முடியும் என்பதை மற்ற வீரர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை செய்யாவிட்டால் மும்பை வெற்றி பெறாது”என்று கூறியுள்ளார். இதனிடையே மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் ஒற்றுமையுடன் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IPL 2024: ஐ.பி.எல். போட்டிகள் திடீர் தேதி மாற்றம்! எந்த மேட்ச் எப்போது நடைபெறும்?
மேலும் படிக்க: Ben Stokes: டி20 உலகக்கோப்பைத் திருவிழா! ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன பென் ஸ்டோக்ஸ் - என்ன?