LSG vs RCB: 'எட்டுது நம்ம சத்தம்…' கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி.. சண்டையில் முடிந்த கொண்டாட்டம்!
காற்றில் ஒரு முத்தத்தை ஊதி, ரசிகர்களை, அமைதி காக்க வேண்டாம் என்று 'வாயில் கைவைத்து' சைகை காண்பித்து, சத்தமாக உற்சாகப்படுத்துமாறு விராட் கோலி கூறினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2023 இன் 43வது ஆட்டத்தின் போது வெற்றிப்பதையில் இழுத்துச்செல்லும் கேட்சை பிடித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி லக்னோ அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தனது செலிபிரேஷன் மூலம் பதிலடி கொடுத்தது வைரலானதுடன் பெரும் சர்சையும் ஆனது.
கோலி செய்த செலிபிரேஷன்
126 என்ற குறைந்த ரன்களையே குவித்த ஆர்சிபி அணி லக்னோ அணியை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸின் போது, 4 ஓவர்களில் 21/2 என்ற நிலை இருந்தது. ஆயுஷ் படோனி மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் கிரீஸில் இருந்தனர். ஜோஷ் ஹேசில்வுட் வீசிய ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில், படோனி ஒரு டிரைவ் ஆடி தூக்கி அடித்தார். இது கவர் திசையில் நின்று இருந்த கோலியை நோக்கி சென்றது. கோலி தன்னால் முடிந்த உயரத்திற்கு குதித்து அந்த கேட்சை பிடித்தார்.
முன்னர் செய்ததற்கு பதிலடி
கேட்சை பிடித்த பிறகு, கோலி கொண்டாடிய விதம் லக்னோ அணியையே ட்ரிகர் செய்திருக்கும். காற்றில் ஒரு முத்தத்தை ஊதி, ரசிகர்களை, அமைதி காக்க வேண்டாம் என்று 'வாயில் கைவைத்து' சைகை காண்பித்து, சத்தமாக உற்சாகப்படுத்துமாறு கூறினார். முன்னர் இந்த சீசனின் 15வது போட்டியில் RCBக்கு எதிராக LSG வெற்றி பெற்ற பிறகு, சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்டத்தை சத்தம் போடக் கூடாது என்று வாயில் விரல் வைத்து ரசிகர்களுக்கு சைகை செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோலியின் கொண்டாட்டம் கருதப்படுகிறது. போட்டி முழுவதுமே மிகவும் ஆக்ரோஷமாக இருந்த கோலியின் அத்தனை செயல்களும் வைரலாகின. லக்னோ பேட்டிங் சீட்டுக்கட்டுபோல் சரிய, 77 ரன்களுக்கே 8 விக்கெட் என்றானது.
தோல்வி அடைந்த லக்னோ
பின்னர் அமித் மிஸ்ரா ஓரளவுக்கு அடிக்க, இறங்கிய ஆகவேண்டிய கட்டாயத்தில் நம்பர் 11 இல் காலில் அடிபட்ட கேஎல் ராகுல் இறங்கினார். ஆனால் அவரால் ஓட முடியாது என்பதால் சிங்கிள் எடுத்து கடைசி ஓவர் ஸ்டரைக்கிற்கு வரமுடியவில்லை. இதனால் கடைசி ஓவரில் அமித் மிஸ்ரா தூக்கி அடிக்க முயற்சித்து ஆட்டமிழந்ததால் போட்டியை ஆர்சிபி வென்றது. இந்த வெற்றிக்கு பின்னர் ஆர்சிபி அணியினரின் கொண்டாட்டம் பயங்கரமாக இருந்தது. அதற்கு காரணம், லக்னோ அணி கடந்த முறை செய்ததுதான். கடைசி பந்தில் பேட்டிலேயே தொடாமல் சிங்கிள் எடுத்து அந்த வெற்றியை பெற்றுத்தந்த ரவி பிஷ்னோய் மற்றும் ஆவேஷ் கான் கொண்டாடிய கொண்டாட்டத்திற்கு பதிலடியாக இருந்தது.
சண்டையாக மாறிய கொண்டாட்டம்
ஆவேஷ் கான் சற்று ஆவேசப்பட்டு ஹெல்மெட்டை எல்லாம் தூக்கி அடித்தார். அதனாலேயே இம்முறை வெற்றியை நன்றாக கொண்டாடிய ஆர்சிபி அணியினரின் செயல், லக்னோ அணியில் இருவரை கடுப்பேற்றியுள்ளது. கம்பிர் நேராக கோலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை சூடானபோது, அங்கிருந்த வீரர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். அதே போல கை கொடுக்கும்போது நவீன்-உல்-ஹக் கோலியிடம் ஏதோ சொல்ல, கோலி கையை உதறிக்கொண்டு சென்றார். பின்னர் இவர்களை கேஎல் ராகுல் பேசவைக்க முயன்றபோது அப்போதும் அங்கு நிற்காமல் விலகி சென்றார். இவ்வளவு ட்ராமாக்களுக்கு பின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோருக்கு அந்த போட்டியின் முழு சம்பளமும், நவீன் உல் ஹக்கின் 50% சம்பளமும் அபராதமாக விதிக்கப்பட்டது.