IPL Longest Six : ஐ.பி.எல். தொடரின் மிகப்பெரிய சிக்ஸ்..! 14 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சி.எஸ்.கே. வீரரின் சாதனை...!
ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக கிறிஸ் கெயில் வலம் வந்தாலும், அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியல் மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 15வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளது. 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டியில் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது. 14 முறை நடைபெற்று நிறைவு பெற்றுள்ள இந்த ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக கிறிஸ் கெயில் வலம் வந்தாலும், அதிக தூரத்திற்கு சிக்ஸர் அடித்த வீரர்களின் பட்டியல் மிகவும் ஆச்சரியமாகவே உள்ளது.
ஐ.பி.எல். போட்டிகளில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர் என்ற அரிய சாதனையை தன் வசம் வைத்திருப்பவர் தோனியோ, கெயிலோ, ரோகித் சர்மாவோ கிடையாது. தென்னாப்பிரக்காவைச் சேர்ந்த அல்பி மோர்கல்.
அல்பிமோர்கல், பிரவீன்குமார் :
2008ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஆல்ரவுண்டர் அல்பி மோர்கல் பெங்களூர் அணிக்காக அப்போது ஆடிய பிரக்யான் ஓஜா பந்தில் அடித்த சிக்ஸர் 125 மீட்டர் தொலைவிற்கு சென்றது. அந்த தொடரில் மட்டுமின்றி இதுவரை நடைபெற்றுள்ள 14 ஐ.பி.எல். தொடர்களுக்குமே சேர்த்து அதிக தூரத்திற்கு சென்ற சிக்ஸராக இந்த சிக்ஸரே பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் இந்திய பந்துவீச்சாளர் பிரவீன்குமார் உள்ளார். 124 மீட்டர் தொலைவிற்கு சிக்ஸர் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அதுவும் சாதாரண பந்துவீச்சாளர் பந்தில் அவர் இந்த சிக்ஸரை விளாசவில்லை. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக வலம் வந்த லசித் மலிங்காவின் பந்தில் இந்த சிக்ஸரை விளாசி அவர் சாதனை படைத்துள்ளார்.
தோனி, யுவராஜூக்கு என்ன இடம்?
இந்திய அணியின் அசகாய சூரர்களாகவும், சிக்ஸர் மன்னர்களாகவும் வலம் வந்தவர்கள் தோனியும், யுவராஜ் சிங்கும். இருவரும் ஐ.பி.எல்.லிலும் கொடிகட்டி பறந்தவர்கள். இந்திய அணிக்காக 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்த யுவராஜ்சிங் ஐ.பி.எல். போட்டியில் தனது அதிகபட்ச தூரமாக 119 மீட்டருக்கு சிக்ஸர் அடித்துள்ளார். 2009ம் ஆண்டு அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
கேப்டன்களின் கேப்டன் என்று அழைக்கப்படுபவரும், ஹெலிகாப்டர் ஷாட்டிற்கு சொந்தக்காரருமான தோனி இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார். அவர் 2009ம் ஆண்டு தனது அதிகபட்ச தொலைவாக 115 மீட்டர் தொலைவிற்கு சிக்ஸர் விளாசியுள்ளார்.
- அல்பி மோர்கல் - 125 மீட்டர் ( 2008ம் ஆண்டு)
- பிரவீன்குமார் - 124 மீட்டர் (2011ம் ஆண்டு)
- ஆடம் கில்கிறிஸ்ட் – 122 மீட்டர் ( 2011ம் ஆண்டு)
- ராபின் உத்தப்பா - 120 மீட்டர் ( 2010ம் ஆண்டு)
- கிறிஸ் கெயில் - 119 மீட்டர் (2013ம் ஆண்டு)
- யுவராஜ் சிங் - 119 மீட்டர் (2009ம் ஆண்டு)
- ராஸ் டெய்லர் - 119 மீட்டர் (2008ம் ஆண்டு)
- பென் கட்டிங் - 117 மீட்டர் (2016ம் ஆண்டு)
- கவுதம் கம்பீர் - 117 மீட்டர் ( 2013ம் ஆண்டு)
- எம்.எஸ். தோனி - 115 மீட்டர் (2009ம் ஆண்டு)
இந்த பட்டியலில் இந்திய அணியன் தற்போதைய ஜாம்பவான் வீரர்களும், மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும், பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் முதல் 10 இடத்திற்குள் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்