'என் வழி தனி வழி'- வெங்கடேஷ் ,திரிபாதி அதிரடியில் மூன்றாவது முறையாக ஐபிஎல் ஃபைனலில் கேகேஆர் !
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் கடைசி ஓவரின் த்ரில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின்3ஆவது ஓவரை தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வீசினார். அவர் வீசிய முதல் பந்தில் பிருத்வி ஷா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஷிகர் தவான் மற்றும் ஸ்டையோனிஸ் ஆகிய இருவரும் நிதானமாக ஆடி டெல்லி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெல்லி அணி 10 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65ரன்கள் எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டையோனிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த போது சிவம் மாவி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் 36 ரன்களில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
இதைத் தொடர்ந்து 135 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் அஸ்வின்,ரபாடா உள்ளிட்ட முன்னணி வீரர்களின் பந்துவீச்சில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 6 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்தது.
அதன்பின்னர் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதனால் கொல்கத்தா அணி 10 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 76 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் ஐயர் 38 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் உதவியுடன் அரைசதம் கடந்து அசத்தினார். அரைசதம் கடந்த பிறகு 55 ரன்கள் எடுத்திருந்த போது வெங்கடேஷ் ஐயர் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் நிதிஷ் ரானா 13 ரன்களுடனும், கில் 46 ரன்களுடனும் வெளியேறினர். அதைத் தொடர்ந்து 18ஆவது ஓவரை வீசிய ரபாடா ஒரு என் மட்டும் விட்டு கொடுத்து தினேஷ் கார்த்திக் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதன்பின்னர் 19ஆவது ஓவரை வீசிய நார்கே 3 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கனை விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணி வெற்றி பெற 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் கடைசி ஓவரை ரவிச்சந்திரன் அஸ்வின் வீசினார். அந்த ஓவரில் ஷகிப் அல் ஹசன் (0) மற்றும் சுனில் நரேன்(0) என்று அடுத்தடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதற்கு அடுத்து வீசிய ஹாட்ரிக் பந்தில் ராகுல் திரபாதி சிக்சர் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன்மூலம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இதற்கு முன்பாக கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அந்த இரண்டு முறையும் கொல்கத்தா அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பெஸ்ட் தருணமாக விராட் கோலி இன்னிங்ஸ் தேர்வு! எந்த போட்டி அது?