ஒரே ஒரு ஓவர்… மொத்த ஆட்டமும் க்ளோஸ்; அர்ஜுன் டெண்டுல்கர் ஓவரை சுக்குநூறாக்கிய பஞ்சாப்!
முக்கியமான நேரத்தில் பஞ்சாப் அணியும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, ஆட்டத்தை வெல்ல கியர்களுக்கு கியர் மாற்ற வேண்டிய தேவை இருந்தது. அப்போது வரப்பிரசாதமாக வந்ததுதான் அர்ஜுன் டெண்டுல்கரின் ஓவர்.
மும்பை இந்தியன்ஸின் அர்ஜுன் டெண்டுல்கர் சனிக்கிழமை இரவு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி மூன்று ஓவர்களில் 1/48 என்ற எண்ணிக்கையைப் பதிவு செய்திருந்தார்.
அர்ஜுன் டெண்டுல்கர்
இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் 23 வயதான அர்ஜுன், கடந்த வாரம் KKR க்கு எதிரான ஆட்டத்தின் போது ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார். இந்த வார தொடக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக லீக்கில் தனது முதல் விக்கெட்டை அவர் வீழ்த்தினார். 20 ரன்களை கட்டுப்படுத்தும் எளிய டாஸ்க் அவரிடம் கொடுக்கப்பட, அர்ஜுன் ஐந்து ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதே நேரத்தில் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமாரை கடைசி பந்தில் ஆட்டமிழக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடந்த இந்த போட்டியில், ரோஹித் ஷர்மா பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த பிறகு அர்ஜுன் பந்துவீச்சை தொடங்கும்போது நன்றாகத்தான் தொடங்கினார். அவர் முதல் ஓவரில் ஐந்து ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். மேலும் பவர்பிளேவுக்குப் பிறகு பிரப்சிம்ரன் சிங்கின் முக்கியமான விக்கெட்டைப் வீழ்த்தி, பஞ்சாப் அணியை இக்கட்டான சூழலுக்குள் தள்ளினார். ஆனால் ஆட்டத்தில் அவர் வீசிய மூன்றாவது ஓவர், அதுவரை செய்த அனைத்தையும் தவிடுபொடியாக்கியது.
வசமாக சிக்கிய அர்ஜுன்
இன்னிங்ஸின் 16வது ஓவரை வீச ரோஹித் அர்ஜுனை அழைத்தார்; அந்த முக்கியமான நேரத்தில் பஞ்சாப் அணியும் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது, ஆட்டத்தை வெல்ல கியர்களுக்கு கியர் மாற்ற வேண்டிய தேவை இருந்தது. அப்போது வரப்பிரசாதமாக வந்ததுதான் அர்ஜுன் டெண்டுல்கரின் ஓவர். அதை சரியாகப் பயன்படுத்த பஞ்சாப் அணியினர் முடிவு செய்தனர். அந்த நேரத்தில் சாம் கரன் (15 பந்துகளில் 17) மற்றும் ஹர்பிரீத் சிங் பாட்டியா (20 பந்துகளில் 16) ஆகியோர் களத்தில் அடிக்க முடியாமல் திணறி நின்றுகொண்டிருந்தனர்.
துவம்சம் செயத பஞ்சாப் அணி
PBKS அணி அந்த ஓவருக்கு முன் 118/4 என்ற நிலையில் இருந்தது. ஒரு மிகப்பெரிய ஓவரை எதிர்பார்த்து காத்திருந்தது. முதல் பந்தே கரன் அர்ஜுனை நேராக ஒரு சிக்ஸர் அடித்து வரவேற்றார். இரண்டாவது பந்தை வைடாக வீசிய அர்ஜுன், அந்த பந்தை மீண்டும் வீச, அது பவுண்டரிக்கு சென்றது. மூன்றாவது பந்தில் கரன் ஒரு ரன் எடுக்க, ஹர்பிரீத் அடுத்த இரண்டு பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். அடுத்த பந்தை ஃபுல் டாசாக வீச, அது வயிற்றுக்கு மேல் சென்றதால், நோ பால் கொடுக்கப்பட்டது. அது போக அந்த பந்தில் பவுண்டரிய அடித்தார் ஹர்ப்ரீத். ஃப்ரீ ஹிட்டான அடுத்த பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட அர்ஜுன் ஓவர் சல்லி சல்லியாக நொறுக்கப் பட்டது.
— Guess Karo (@KuchNahiUkhada) April 23, 2023
அதிக ரன் விட்டுக்கொடுத்தவர்கள் பட்டியல்
அர்ஜுன், அந்த ஓவரில் 31 ரன்களை விட்டுக்கொடுத்து, மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன் விட்டுக்கொடுத்த ஓவரை வீசினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான ஆட்டத்தின் போது கடந்த ஆண்டு 35 ரன்களை விட்டுக்கொடுத்து, அந்த அணிக்காக மிகவும் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த சாதனையை டேனியல் சாம்ஸ் பெற்றுள்ளார். அர்ஜுனின் ஓவர் இந்த ஆண்டு விட்டுக்கொடுக்கப்பட்ட அதிக ரன்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் அவர் மட்டும் இல்லை, இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாலும், KKRக்கு எதிரான ஆட்டத்தின் இறுதி ஓவரில் 31 ரன்களை விட்டுக் கொடுத்து அந்த இடத்தில் உள்ளார். ரின்கு சிங் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 5 சிக்ஸர்களை அடித்து ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.