RCB vs LSG: லக்னோவை பழிதீர்க்குமா பெங்களூர்..? வெற்றியை தொடருமா லக்னோ..? இன்று நேருக்கு நேர் மோதல்..!
ஐ.பி.எல். தொடரில் ஆர்.சி.பி. - லக்னோ அணிகள் இன்று மீண்டும் நேருக்கு நேர் மோதுகின்றன. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.பி.எல். தொடரின் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லப்போகும் டாப் 4 அணிகள் யார் என்பதை தீர்மானிக்கும் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், 16வது சீசனின் 43வது ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், டுப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஆர்.சி.பி. - லக்னோ:
ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஆர்.சி.பி. அணி போராடி தோல்வி அடைந்த நிலையில், இன்று நடக்கும் போட்டியில் லக்னோவை பழிதீர்க்குமா? என்று பெங்களூர் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். லக்னோவில் உள்ள வாஜ்பாயி மைதானத்தில் நடக்கும் இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.
கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ அணி 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 8 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. லக்னோ அணியை காட்டிலும் பெங்களூர் அணிக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியமானது ஆகும்.
மிரட்டும் பேட்டிங்:
லக்னோ அணியை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் இன்னும் தனது முழு திறமையை வெளிப்படுத்தி ஆடவில்லை. அந்த அணியின் பலமாக மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய போட்டியில் ஸ்டோய்னிஸ், பூரண் அதிரடியை இன்னும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். பெங்களூர் அணி வீரர்கள் இவர்களை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றியை சாத்தியப்படுத்த முடியும்.
பெங்களூர் அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட்கோலி அற்புதமான ஃபார்மில் உள்ளார். அவருடன் ஆட்டத்தை தொடங்கும் டுப்ளிசிஸ் பேட்டிங்கில் மிரட்டி வருகிறார். மேக்ஸ்வெல்லும் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார். பெங்களூர் அணியை பொறுத்தவரையில் இவர்கள் 3 பேர் மட்டுமே பேட்டிங்கில் முதுகெலும்பாக உள்ளனர். மிடில் ஆர்டர், டெயிலண்டர்கள் யாரும் பேட்டிங்கில் இதுவரை ஜொலிக்கவில்லை. இளம் வீரர்கள் லோம்ரார், பிரபுதேசாய், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டிங்கில் மிரட்ட வேண்டியது அவசியம் ஆகும்.
படுமோசமான பந்துவீச்சு:
பந்துவீச்சை பொறுத்தவரையில் இரு அணிகளும் பெரியளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றே கூறலாம். மைதானத்தின் தன்மை பொறுத்து பந்துவீச்சு எடுபட வாய்ப்புள்ளது. லக்னோ அணியின் ஆவேஷ்கான், உனத்கட், கிருஷ்ணப்ப கவுதம், கரண் சர்மா, ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம் ஆகும்.
பெங்களூர் அணியை பொறுத்தவரை முகமது சிராஜ் மட்டுமே இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த சீசன்களில் அசத்திய ஹர்ஷல் படேல் ரன்களை வாரி வழங்குகின்றார். இளம் வீரர் வைஷாக் சிறப்பாக வீச வேண்டியது அவசியம் ஆகும். சுழலில் ஹசரங்கா அசத்த வேண்டியது அவசியம் ஆகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஆர்.சி.பி. அணி ஏறுமுகத்துடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும்.
மேலும் படிக்க: Watch Video: போட்டிக்கு நடுவே போர்க்களமான மைதானம்... ஹைதராபாத் - டெல்லி அணிக்கு இடையே பார்வையாளர்களால் பரபரப்பு..!
மேலும் படிக்க: Watch Video: ஸ்லோ பந்தில் விக்கெட்டை விட்ட ரோஹித்... அவுட்டா? நாட் அவுட்டா? ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை!