IPL Highest Total: ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ரன் குவித்த லக்னோ அணி… முழு பட்டியல் இதோ!
ஐபிஎல் வரலாற்றில் குவிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை லக்னோ எட்டியுள்ள நிலையில் முதல் இடம் மற்றும் அதற்கு அடுத்த இடங்களில் உள்ள ரன் குவிப்புகள் குறித்த பட்டியல் இதோ.
நேற்று மொஹாலியில் நடந்த பஞ்சாப் அணியுடனான போட்டியில் லக்னோ அணி ரெகார்ட் ப்ரேக்கிங் ஸ்கோரை பதிவு செய்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் அடித்த அடியில் பந்துகள் நாலாப்புறமும் சிதற லக்னோ அணியின் ஸ்கோர் இமாலய உயரத்தை எட்டியது. 8வது ஓவரில் 100, 16வது ஓவரில் 200 என்று ஆரம்பத்தில் இருந்தே ரன்ரேட்டை கொஞ்சமும் குறைய விடாமல், இந்திவ் பவுலரையும் விட்டு வைக்காமல் தாக்கினர் லக்னோ அணியினர். இதனால் அணியின் ரன் எண்ணிக்கை 250 ஐக் கடந்து 257இல் சென்று மெஷின் நின்றது. கொஞ்ச நேரத்தில் ஆர்சிபி அணியின் சாதனை ஸ்கொரான 263க்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற பயத்தை காட்டிவிட்டனர் லக்னோ அணியினர். இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரைக் குவித்தது லக்னோ அணி.
லக்னோ அணி 257 ரன்கள்
இந்த போட்டியில் அதிரடி காண்பித்த கைல் மேயர்ஸ் (24 பந்துகளில் 54) மற்றும் ஸ்டோனிஸ் (40 பந்துகளில் 72) ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 257 ரன்களைத் தொட முடிந்தது. இடையில் ஆயுஷ் பதோணியும் தன் பங்குக்கு அதிரடி காண்பித்து செல்ல, பூரான் மளமளவென 19 பந்துகளில் 45 ரன்கள் குவித்துவிட்டு துரதிர்ஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார். இந்த ஹை ஸ்கோரிங் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பஞ்சாப் கிங்ஸை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆர்சிபி அணியின் ஆதிக்கம்
இப்படி ஒரு அதிரடி காட்டியும் ஐபிஎல்-இன் அதிகபட்ச ஸ்கோரை எட்டமுடியவில்லை. அதற்கு காரணம் 2013 இல் இருந்தவர் யூனிவர்ஸ் பாஸ் கெயில். வெறும் 66 பந்துகளில் 175 ரன் அடித்து புனே வாரியர்ஸை விடியோ கேம் ஆடுவது போல் ஆடினார். ஒரே இன்னிங்சில் 17 சிக்ஸர் அடித்த வீரர் என்றும் பெயர் பெற்ற அவர் 13 பவுண்டரிகளையும் அடித்திருந்தார். ஆடிய பாதி பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் அன்று ஆடியது சாதாரண ஆட்டம் அல்ல. கிட்டத்தட்ட அதற்கு இணையான ஆட்டத்தை இன்று லக்னோ அணி வெளிப்படுத்தி இருந்தாலும் இதனை எட்ட அவர்களுக்கு 4 பேர் அடிக்க வேண்டி இருந்தது ஆனால், ஒரே ஆளாக நின்று செய்தவர் கெயில். மூன்றாவது இடத்தில் இருப்பது மீண்டும் ஆர்சிபி அணி. 2016 தொடரில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக அடித்த இன்னிங்சில் கெயில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், விராட் கோலியும், ஏபி டிவில்லியர்ஸும் செஞ்சுரி அடித்து மாஸ் காட்டிய போட்டி இது. இதில் அவர்கள் மூன்று விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்தனர்.
அணி |
ஆண்டு |
எதிரணி |
ரன் |
பெங்களூரு |
2013 |
புனே வாரியஸ் |
263/5 |
லக்னோ |
2023 |
பஞ்சாப் கிங்ஸ் |
257/5 |
பெங்களூரு |
2016 |
குஜராத் லயன்ஸ் |
248/3 |
சென்னை |
2010 |
ராஜஸ்தான் |
246/5 |
கொல்கத்தா |
2018 |
பஞ்சாப் |
245/6 |
சென்னை |
2008 |
பஞ்சாப் |
240/5 |
பெங்களூரு |
2015 |
மும்பை |
235/1 |
சென்னை |
2023 |
கொல்கத்தா |
235/4 |
மும்பை |
2021 |
ஐதராபாத் |
235/9 |
அடுத்தடுத்த இடங்கள்
நான்காவது இடத்தில் சென்னை அணி 2010 இல் ராஜஸ்தானை செய்த சம்பவம். முரளி விஜய் கன்னாபின்னாவென்று அடித்து சதமடிக்க, ஹெய்டன், தில்ஷன் ஒருபுறம் ஆட ரன் 246ஐ எட்டியது. அதற்கு அடுத்ததாக இருப்பது இதே பஞ்சாப் அணியை 2018இல் அடித்த கொல்கத்தா. ஓப்பனிங் இறங்கிய சுனில் நரைன் அதிரடி காட்ட, தினேஷ் கார்த்திக் அரைசதம் அடிக்க, வருபவர்கள் எல்லோரும் சிக்ஸ் அடிக்க ரன் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ஐ எட்டியது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது ஐபிஎல் வரலாற்றில் நடந்த முதல் போட்டி. 2008ஆம் ஆண்டு, அந்த முதல் போட்டியில் சென்னை அணி பஞ்சாப் அணிக்கு எதிராக 240 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.