IPL 2025 Points Table: மொத்தமாய் மாறிப்போன ஐபிஎல் புள்ளிப்பட்டியல் - மும்பை Vs பெங்களூரு இன்று மோதல், வெற்றி யாருக்கு?
IPL 2025 MI Vs RCB: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

IPL 2025 MI Vs RCB: கடந்த வார இறுதியின் முடிவில் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் 2025:
கிரிக்கெட் திருவிழாவான நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இதற்காக வெற்றிகளை குவிக்க ஒவ்வொரு அணியுன் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த வார இறுதியின் முடிவில் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன. கடைசியாக நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத் அணியை அதன் சொந்த மைதானத்திலேயே வைத்து, குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2025 புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
| டெல்லி | 3 | 3 | 0 | 6 |
| குஜராத் | 4 | 3 | 1 | 6 |
| பெங்களூரு | 3 | 2 | 1 | 4 |
| பஞ்சாப் | 3 | 2 | 2 | 4 |
| கொல்கத்தா | 4 | 2 | 2 | 4 |
| லக்னோ | 4 | 2 | 2 | 4 |
| ராஜஸ்தான் | 4 | 2 | 2 | 4 |
| மும்பை | 4 | 1 | 3 | 2 |
| சென்னை | 4 | 1 | 3 | 2 |
| ஐதராபாத் | 5 | 1 | 4 | 2 |
ஐபிஎல் இன்றைய போட்டி:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் தோல்வியுற்றன. இதனால், இன்றைய போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகின்றன. குறிப்பாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்களை கொண்ட இரு அணிகள் மோதுவதால், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ரோகித் மற்றும் பும்ரா ஆகிய இருவருமே இன்றைய போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மும்பை அணிக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்.
மும்பை Vs பெங்களூரு
பெங்களூரு அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், கடைசியாக விளையாடிய போட்டியில் மோசமான பேட்டிங் காரணமாக குஜராத்திடம் தோல்வியுற்றது. ஆரம்பத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்தால், அந்த அணியின் மற்ற வீரர்கள் தடுமாறுவது பின்னடைவாக கருதப்படுகிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பாதிப்பாக உள்ளது. குறிப்பாக தொடக்க வீரர்கள் நல்ல துவக்கத்தை அமைத்து கொடுக்க தவறுகின்றனர். இந்த குறைகளை பூர்த்தி செய்து இன்று விளையாடினால் வெற்றிக் கோட்டை எட்ட முடியும். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கே முன்னேறக்கூடும். அதேநேரம், மும்பை அணி வெற்றி பெற்றால் அதிகபட்சமாக நான்காவது இடத்திற்கே முன்னேறக்கூடும்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இருஅணிகளும் இதுவரை 33 முறை மோதியுள்ளன. அதில் மும்பை அணி 19 முறையும், பெங்களூரு அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்ச ஸ்கோராக பெங்களூரு 235 ரன்களையும், குறைந்தபட்ச ஸ்கோராக மும்பை 111 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
உத்தேச பிளேயிங் லெவன்:
மும்பை இந்தியன்ஸ்: ரிக்கல்டன் (வாரம்) , ரோகித் ஷர்மா , எஸ்ஏ யாதவ் , திலக் வர்மா , ஜாக்ஸ் , பாண்டியா (கே) , மிட்செல் சான்ட்னர் , ஜேஜே பும்ரா , விக்னேஷ் புதூர் , டிரெண்ட் போல்ட் , சாஹர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: சால்ட் , ஜேஎம் ஷர்மா, ஆர்எம் படிதார் (கே) , விராட் கோலி , தேவ்தத் படிக்கல் , டிம் டேவிட், லிவிங்ஸ்டோன், க்ருணால் பாண்டியா , யாஷ் தயாள் , ஜோஷ் ஹேசில்வுட் , பி குமார்




















