RCB Vs KKR: முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி? KKR அவுட் - பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
IPL 2025 RCB Vs KKR: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான் போட்டி மழை காரணமாக ரத்தானதால், பெங்களூரு கிட்டத்தட்ட முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

IPL 2025 RCB Vs KKR: ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான் போட்டி மழை காரணமாக ரத்தானதால், பெங்களூரு கிட்டத்தட்ட முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டியை காலி செய்த மழை:
பாதுகாப்பு காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் போட்டி, நேற்று மீண்டும் தொடங்கியது. அதன்படி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத திட்டமிடப்பட்டு இருந்தன. ஆனால், நேற்று மாலை முதலே அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. இரவு 10.30 மணியை கடந்தும் மழை தொடர்ந்ததால், டாஸ் கூட போடப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ஆர்சிபி:
அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், நடப்பு தொடரில் முதல் அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் கிடைத்த ஒரு புள்ளியுடன், 17 புள்ளிகளை எட்டி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதனால், லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களில் ஒரு இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மீதமுள்ள லீக் போட்டிகளின் முடிவில் நடக்க மிகவும் அரிதான வாய்ப்புகள் மட்டுமே உள்ள சூழலை கருத்தில் கொண்டால், பெங்களூரு அணி 99.99 சதவிகிதம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. 12 லீக் போட்டிகளை மட்டுமே விளையாடி முடித்துள்ள பெங்களூரு அணிக்கு இன்னும் கூட இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. அதேநேரம், 13 போடிட்களில் விளையாடி 12 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளது.
ஐபிஎல் 2025 - புள்ளிப்பட்டியல்:
| அணிகள் | போட்டிகள் | வெற்றி | தோல்வி | புள்ளிகள் |
| பெங்களூரு | 12 | 8 | 3 | 117 |
| குஜராத் | 11 | 8 | 3 | 16 |
| பஞ்சாப் | 11 | 7 | 3 | 15 |
| மும்பை | 12 | 7 | 5 | 14 |
| டெல்லி | 11 | 6 | 4 | 13 |
| கொல்கத்தா | 13 | 5 | 6 | 12 |
| லக்னோ | 11 | 5 | 6 | 10 |
| ஐதராபாத் | 11 | 3 | 7 | 7 |
| ராஜஸ்தான் | 12 | 3 | 9 | 6 |
| சென்னை | 12 | 3 | 9 | 6 |
பஞ்சாப், குஜராத் சாதிக்குமா?
இந்த சூழலில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதலாவதாக பிற்பகல் 3.30 மணிக்கு சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. ராஜஸ்தான் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறலாம். அதேநேரம், பிளே-ஆஃப் சுற்றுக்கான அந்த அணியின் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
தொடர்ந்து, இரவு 7.30 மணிக்கு நடைபெறும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோத உள்ளன. 5வது இடத்தில் உள்ள டெல்லி அணி, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை நீட்டிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டியுள்ளது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 3 அல்லது நான்காவது இடம் வரை முன்னேறக்கூடும். அதேநேரம், குஜராத் அணி வெற்றி பெற்றால், நடப்பு தொடரில் அதிகாரபூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாக மாறும். புள்ளிப்பட்டியலிலும் முதல் இடத்தை உறுதி செய்யும்.
இன்றைய இரண்டு போட்டிகளுமே பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகளை உறுதி செய்வதால், இவற்றை காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.




















