PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
IPL 2025 Playoff PBKS Vs RCB: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில், இன்று பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

IPL 2025 Playoff PBKS Vs RCB: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும்ன் முதல் குவாலிஃபையர் போட்டியில், வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
ஐபிஎல் 2025: குவாலிஃபையர்-1
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் முடிவில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதன்படி, முதல் இரண்டு இடங்களை பிடித்த பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள், இன்று நடைபெறும் முதல் குவாலிஃபையர் போட்டியில் மோத உள்ளன. நியூ சண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை பஞ்சாப் அணி ஒரே முறையும், பெங்களூரு அணி 3 முறையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. ஆனால், இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் Vs பெங்களூரு: பலம், பலவீனம்
பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஸ்ரேயாஸ் அய்யர் மிடில் ஆர்டரை வலுப்படுத்த, நேஹல் வதேரா மற்றும் ஸ்டோய்னிஸ் அசாதாரணமான ஃபார்மில் இருப்பது அணிக்கு நம்பிக்கை அளிக்கிறது. பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென் மற்றும் ஜேமிசன் ஆகியோர் வேகத்தில் மட்டுமின்றி துல்லியமாகவும் பந்துவீசி அசத்தி வருகின்றனர். இதன் மூலம், ஒட்டுமொத்தமாகவே பஞ்சாப் பிளேயிங் லெவன் வலுவான கலவையாக உள்ளது.
பஞ்சாப் அணிக்கு நிகராக பெங்களூருவின் தொடக்க வீரர்களான சால்ட் - கோலி ஜோடி அதிரடியாக ரன் சேர்த்து வருகிறது. படிதாரின் காயம் பிரச்னையாக இருந்தாலும், ஜிதேஷ் சர்மா மிடில் ஆர்டரில் நம்பிக்கை அளிக்கிறார். இன்றைய போட்டியில் டிம் டேவிட் அணிக்கு திரும்புவது பேட்டிங் ஆர்டரை மேலும் வலுவாக்கும்.பெங்களூரு அணிக்கு பந்துவீச்சு பெரும் பிரச்னையாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஹேசல்வுட் இன்றைய போட்டியில் களமிறங்கினால் அது பெங்களூருவை மேலும் வலுவாக்கும்.
பஞ்சாப் Vs பெங்களூரு: நேருக்கு நேர்
இரண்டு அணிகளுமே நடப்பு தொடரில் தலா 9 வெற்றிகளை ஈட்டினாலும், ரன்ரேட் அடிப்படையில் பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. இரு அணிகளும் நடப்பு தொடரில் இரண்டு முறை நேருக்கு நேர் எதிர்கொண்ட நிலையில், தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் 35 முறை நேருக்கு நேர் மோதியதில் பஞ்சாப் 18 முறையும், பெங்களூரு 17 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இந்த அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக பெங்களூரு 241 ரன்களையும், குறைந்தபட்சமாக அதே அணி 84 ரன்களையும் சேர்த்துள்ளது.
முல்லன்பூர் மைதானம் எப்படி?
நியூசண்டிகரில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் நடப்பாண்டில் இதுவரை 4 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதன்படி முதல் இன்னிங்சின் சராசரி ஸ்கோர் 183 ஆக உள்ளது. முதலில் பேட்டிங் செய்தவர்களே 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்து வலுவான இலக்கை நிர்ணயிப்பதையே விரும்புவார்கள்.
உத்தேச பிளேயிங் லெவன்:
பஞ்சாப் கிங்ஸ் (PBKS): பிரியான்ஷ் ஆர்யா, நேஹால் வதேரா, ஷ்ரேயாஸ் ஐயர் (கே), ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (WK), மார்கஸ் ஸ்டோய்னிஸ், மார்கோ ஜான்சன், ஹர்பிரீத் ப்ரார், கைல் ஜேமிசன், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக்.
இம்பேக்ட் பிளேயர்: பிரப்சிம்ரன் சிங்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி): பிலிப் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா (கேப்டன்), டிம் டேவிட்/டிம் சீஃபர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட்/நுவான் துஷாரா, சுயாஷ் சர்மா, யாஷ் தயாள்.
இம்பேக்ட் பிளேயர்: ரஜத் படிதர்



















