RCB: டிம் டேவிட்டிற்கு என்னாச்சு? அவருக்கு பதிலாகத்தான் டிம் ஷெய்ஃபெர்ட்டா? ஆர்சிபியில் நடப்பது என்ன?
ஆர்சிபி அணியில் புதியதாக இணைந்துள்ள டிம் ஷெய்ஃபெர்ட் அந்த அணியின் முக்கிய வீரர் டிம் டேவிட்டிற்கு பதில் இணைந்துள்ளதாக கூறப்படுவதால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஐபில் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையிலும் ஆர்சிபி அணி இன்று முக்கியமான போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக ஆடுகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றாலும் எந்த சுற்றில் ஆடப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்டாய வெற்றி நெருக்கடியில் ஆர்சிபி:
இந்தியா - பாகிஸ்தான் மோதல் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகள் தடுமாறி வருகின்றனர். நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் குவாலிஃபயர் 1 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தற்போது 17 புள்ளிகளுடன் உள்ள ஆர்சிபி அணி குவாலிஃபயர் சுற்றில் ஆட வேண்டும் என்றால் இன்று நடக்கும் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
டிம் ஷெய்ஃபர்ட் யாருக்கு பதில்?
இந்த நிலையில், ஆர்சிபி அணிக்காக கடந்த போட்டியில் ஆடாத ஹேசில்வுட் மீண்டும் பெங்களூர் அணியுடன் இணைந்துள்ளார். அதேசமயம், கடந்த போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது டிம் டேவிட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் பாதியிலே வெளியேறினார். மேலும், காலில் ஏற்பட்ட காயத்துடனே பேட்டிங் செய்த டிம் டேவிட் மிகவும் அவதிப்பட்டதுடன் அவுட்டானார். இந்த நிலையில், ஆர்சிபி அணியில் டிம் ஷெய்ஃபெர்ட் ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.
டிம் டேவிட்டிற்கு பதிலாக அவர் அணியில் இணைந்துள்ளதாக தொடர்ந்து தகவல் பரவி வருகிறது. உண்மை என்னவென்றால் டிம் ஷெய்ஃபெர்ட் டிம் டேவிட்டிற்கு பதிலாக அணியில் இணையவில்லை. அவர் ஆர்சிபியின் இளம் தொடக்க வீரர் ஜேக்கப் பெத்தலுக்கு பதிலாக அணியில் இணைந்துள்ளார்.
30 வயதான டிம் ஷெய்ஃபெர்ட் இதுவரை 66 டி20 போட்டிகளில் ஆடி 1540 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 10 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 97 ரன்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவர் 3 போட்டிகளில் மட்டுமே ஆடி 26 ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ப்ளேயிங் லெவனில் களமிறங்க வாய்ப்பு கிடைத்தால் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்வாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.
டிம் டேவிட்டிற்கு என்னாச்சு?
அதேசமயம் இந்த போட்டியில் டிம் டேவிட் ஆடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றை கருத்தில் கொண்டு டிம் டேவிட்டிற்கு ஓய்வு வழங்கப்படும் என்றே கூறப்படுகிறது.
ப்ளேயிங் லெவன் சவால்:
அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு பதிலாக டிம் ஷெய்ஃபெர்ட் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், ஆர்சிபி அணியின் இளம் ஹிட்டர் சுவஸ்திக் சிக்காராவிற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மிக மிக முக்கியமான போட்டியில் இன்று ஆர்சிபியின் ப்ளேயிங் லெவன் மிகவும் முக்கியமானதாக உள்ளது. ஆர்சிபி நிர்வாகமும், கேப்டன் படிதாரும் இன்று என்ன செய்யப்போகிறார்கள்? எடுக்கப்போகும் முடிவே ஆர்சிபி அணி ப்ளே ஆஃப்பில் எந்த சுற்றில் ஆடும் என்பதை தீர்மானிக்கும்.




















