Karun Nair: ”காணாமல் போனேன், கண்டுகொள்ளாத பிசிசிஐ” களத்தில் நெருப்பை கக்கிய கருண் நாயர், பதறிய மும்பை..!
Karun Nair: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வீரர் கருண் நாயர், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Karun Nair: ஐபிஎல் போட்டிகளில் ஆயிரத்து 77 நாட்களுக்குப் பிறகு களமிறங்கிய கருண் நாயர், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
கருண் நாயர் அபாரம்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 205 ரன்கள் குவித்தது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியில், முதல் பந்திலேயே மெக்கர்க் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய கருண் நாயர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி திக்குமுக்காடிப்போனது. 22 பந்துகளிலேயே தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். மொத்தமாக 40 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் உட்பட 89 ரன்களை விளாசினார்.
ஷாக்கான பும்ரா:
2022ம் ஆண்டு அதவாது ஆயிரத்து 77 நாட்களுக்குப் பிறகு நேற்றைய போட்டியின் மூலம் தான்,கருண் நாயர் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கினார். அப்போது, உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ராவை எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தை சிக்சராகவும், அடுத்த பந்தை பவுண்டரியாகவும் கருண் நாயர் விளாச ஒட்டுமொத்த மைதானமும் ரசிகர்களின் கரகோஷத்தால் அதிர்ந்தது. அதே ஓவரில் மேலும் ஒரு சிக்சரையும் விளாச பும்ரா ஷாக்கானார். ஒட்டுமொத்த மைதானமும் கருண் நாயரின் பெயரை முழங்கியது. அதே ஓவரில் அவர் தனது அரைசதத்தையும் பூர்த்தி செய்தார். ஆண்டுகளில் அவர் விளாசிய முதல் ஐபிஎல் அரைசதம் இதுவாகும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்த்தாலும், டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
Taking on the world’s best bowler? @karun126 didn’t hesitate! 👏
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
🗣 “He’s reading Bumrah like a book!” - Harsha Bhogle, on air 🎙
Watch the LIVE action ➡ https://t.co/QAuja88phU#IPLonJioStar 👉 #DCvMI | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/IG6LpKDGWk
காணாமல் போன கருண் நாயர்:
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்கள் விளாசிய வீரர்களுக்கான பட்டியலில், விரேந்திர ஷேவாக்கிற்கு அடுத்தபடியாக உள்ள ஒரே வீரர் கருண் நாயர் தான். கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர், அந்த தொடரின் கடைசி போட்டியில் 303 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். போட்டியில் இந்தியா பிரமாண்ட வெற்றியை பெறவும் முக்கிய காரணமாக இருந்தார். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்துக்கொண்டே இருந்தார். ஆனாலும், இந்திய அணியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 300 ரன்கள் அடித்தும் கூட 2017ம் ஆண்டிற்குப் பிறகு கருண் நாயருக்கும் இந்திய அணியில் வாய்ப்பே வழங்கப்படவில்லை. ரசிகர்களும் கூட 300 அடித்தும் ஏன் கருண் நாயர் அணியில் இல்லை என பலமுறை சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை டேக் செய்து கேள்வி எழுப்பினர்
கோரிக்கை வைத்த கருண் நாயர்
இதனிடையே, தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “அன்புள்ள கிரிக்கெட்டே, எனக்கு ஏன் மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடு” என கோரிக்கை விடுத்து இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர். திறமைகளுக்கு மதிப்பளிக்காமல், நட்சத்திர அந்தஸ்திற்காக வீரர்களுக்கு அணியில் இடம் கொடுப்பதாக பிசிசிஐ மீது குற்றம்சாட்டினர். அதேநேரம், கருண் நாயர் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். விதர்பா அணிக்காக களம் கண்டு ரன்களை குவித்தார்.
நெருப்பை கக்கிய கருண் நாயர்:
விதர்பா அணிக்காக 2024/25 சீசனில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சையது முஷ்டக் அலி ட்ராபியில் 6 போட்டிகளில் 255 ரன்களை குவித்தார். விஜய் ஹசாரே ட்ராபியில் 5 இன்னிங்ஸ்களில் ஆட்டமே இழக்காமல் 542 ரன்களை விளாசினார். ரஞ்சி போட்டியிலும் 16 இன்னிங்ஸ்களில் 863 ரன்களை குவித்து, விதர்பா அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் மூலமே, ரூ.50 லட்சத்திற்கு டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு கிடைத்த முதல் வாய்ப்பிலேயே, மும்பை பந்துவீச்சை சூறையாடி கவனம் ஈர்த்தார். அவரது கம்பேக்கை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து அவர் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




















