CSK Vs PBKS: பலம் வாய்ந்த பஞ்சாப் - கம்பேக்கிற்காக காத்திருக்கும் சிஎஸ்கே ரசிர்கள் - சண்டிகரில் வெற்றி யாருக்கு?
IPL 2025 CSK Vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

IPL 2025 CSK Vs PBKS: நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியுற்ற சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
சென்னை Vs பஞ்சாப்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நியூ சண்டிகரில் உள்ள மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முறையே ஒன்பது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காண, இரு அணிகளும் போராடும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் தோல்விகளை தவிர்க்குமா சென்னை?
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் போட்டியில், மும்பை அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றியை பதிவு செய்தது. ஆனால், அதைதொடர்ந்து விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியையே சந்தித்துள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு பிரிவுகளிலுமே சுணக்கமாக இருப்பதும், அதிரடியான பேட்ஸ்மேன்கள் அணியில் இல்லாததும் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் பெரும்பாலனவற்றில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய போட்டியிலாவது வென்று சென்னை அணி கம்பேக் கொடுக்குமா? என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பஞ்சாப் அணி எப்படி?
மறுமுனையில் பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் குஜராத்திடம் வீழ்ந்தது. அதிலிருந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முனைப்பு காட்டுகின்றனர். சொந்த மைதானம் அவர்களுக்கு இன்று கூடுதல் சாதகத்தை கொடுக்கும் என நம்பப்படுகிறது. அதேநேரம், ஸ்ரேயாஸ் அய்யர், ப்ரப்சிம்ரன் சிங், நேஹல் வதேராம், ஷஷாங்க் சிங், ஸ்டோய்னிஷ் என அதிரடி பேட்ஸ்மேன்களும், அர்ஷ்தீப் சிங், ஃபெர்கூசன் போன்ற தரமான பந்துவீச்சாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 16 முறையும், பஞ்சாப் அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் அதிகபட்சமாக சென்னை அணி 240 ரன்களையும், குறைந்தபட்சமாக பஞ்சாப் அணி 92 ரன்களையும் சேர்த்துள்ளது.
மைதானம் எப்படி?
2025 ஐபிஎல்-ல் நியூ சண்டிகரில் நடந்த முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 205/4 ரன்கள் எடுத்து, பின்னர் பஞ்சாபை 155/9 என்ற கணக்கில் கட்டுப்படுத்தியது. முல்லன்பூரில் நடந்த ஆறு ஐபிஎல் போட்டிகளில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 174 ஆகும். முதலில் பேட்டிங் செய்த அணிகள் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன, அதே போல் சேசிங் அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. முதலில் பந்துவீசும் அணி 180 ரன்களுக்குள் எதிரணியை சுருட்டினால் சேசிங் எளிதாகும், தவறினால் தோல்வியை சந்திக்கக் கூடும்
உத்தேச பிளேயிங் லெவன்:
பஞ்சாப் கிங்ஸ்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (WK), ஷ்ரேயாஸ் ஐயர் (C), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லாக்கி பெர்குசன், அர்ஷ்தீப் சிங்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: ரச்சின் ரவீந்திரா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (C), விஜய் சங்கர், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது.




















