IPL 2024: மார்ச் 22ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகளா..? முக்கிய தகவலை சொன்ன ஐபிஎல் தலைவர் அருண் துமால்!
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளுக்கு இடையே நடைபெறும்.
இந்திய பிரீமியர் லீக்கின் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். மேலும், பொதுத் தேர்தல் நடந்தாலும், ஐபிஎல் 17 சீசனுக்கான அனைத்து போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடைபெறும் என தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வருகின்ற மார்ச் 22ம் தேதி முதல் ஐபிஎல்-லின் முதல் போட்டியை தொடங்குவோம் என நம்புகிறோம். இது தொடர்பாக, நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுடம் பேசிவருகிறோம். நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு முதலில் முதல் 15 நாட்களுக்கான அட்டவனை மட்டுமே வெளியிடப்படும். அதன்பிறகு, மீதமுள்ள முழு போட்டி அட்டவணையையும் வெளியிட்டு இந்தியாவில் மட்டுமே நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
முதல் போட்டி எந்தெந்த அணிகளுக்கு இடையே இருக்கும்..?
ஐபிஎல் தொடரின் முதல் போட்டி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளுக்கு இடையே நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டின் முதல் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், இரண்டாம் இடம் பிடித்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது.
2009 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த ஐபிஎல்:
2009ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றபோது, ஐபிஎல் தொடரின் 2வது சீசன் முழுவதும் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன்பிறகு, 2014ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற பொது தேர்தல் காரணமாக முதல் பாதி ஐபில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் 17வது சீசன் முடிந்ததும், சில நாட்களில் டி20 உலகக் கோப்பை தொடங்க இருக்கிறது. எனவே, இதற்கான ஆயுத்த பணிகளிலும் பிசிசிஐ ஈடுபட இருக்கிறது.
வீரர்களுக்கு ஓய்வு இருக்குமா..?
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக ஐபிஎல் 17வது சீசனின் அட்டவணை உடனடியாக வெளியிடப்படாது. இதுவரை கிடைத்த தகவலின்படி முதலில் அனைத்து அணிகளின் முதல் இரண்டு அல்லது மூன்று போட்டிகளின் அட்டவணை மட்டும் வெளியாகும். அதன்பிறகு, நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்படி அட்டவணை பக்கம் வாரியாக வெளியிடப்படும். ஐபிஎல் நிர்வாகக் குழு அட்டவணையை வெளியிடுவதில் உள்துறை அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் நெருங்கி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது. ஐபிஎல் 17வது சீசன் மே 26 வரை நடைபெற உள்ளது. டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் 5ம் தேதி துவங்க உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய வீரர்களுக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 நாட்கள் ஓய்வு அளிக்க பிசிசிஐ முயற்சிக்கும்.
ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை:
உலகக் கோப்பை இந்திய அணி தனது முதல் போட்டியில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியுடன் விளையாடுகிறது. அதேநேரத்தில், ஐசிசி டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டி வருகின்ற ஜூன் 1ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடா இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது.