Cameron Green: அதிரடியாக ட்ரேட் செய்யப்பட்ட கிரீன்; மஞ்சள் படைக்கு எதிராக செல்லுபடியாகுமா முன்னாள் மும்பை வீரரின் ஆட்டம்?
Cameron Green: கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் 2024 மினி ஏலம் முடிந்ததும் மும்பை அணியில் இருந்த கேமரூன் கிரீனை பெங்களூரு அணி ட்ரேட் செய்தது.
ஐபிஎல் தொடரின் 17வது லீக் வரும் 22ஆம் தேதி தொடங்குகின்றது. இந்த லீக்கின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியனும் 5 முறை கோப்பையை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கடந்த 16 ஆண்டுகளாக வலுவான அணியாக இருந்தாலும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட வெல்ல முடியாத அணி என்ற மிகமோசமான சாதனைக்குச் சொந்தக்கார அணியாக உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது.
சென்னை அணியைப் பொறுத்த வரையில் நடந்து முடிந்த மினி ஏலத்தில் சிறப்பான, துடிப்பு மிக்க மற்றும் நீண்ட காலத்திற்கு அணிக்கு பலன் அளிக்ககூடியவர்கள் என்ற நம்பிக்கையின் பேரில் இளம் வீரர்களை வாங்கியுள்ளது. பெங்களூரு அணியைப் பொறுத்தவரையில் பந்து வீச்சாளர்கள் மீது கவனம் செலுத்தி வீரர்களை மினி ஏலத்தில் வாங்கியது. ஏலம் முடிந்த பின்னர் பெங்களூரு அணி சிறப்பான முடிவை எடுத்தது. அதாவது மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கேமரூன் கிரீனை பெங்களூரு அணி வாங்கியது. ஏற்கனவே பலமான வீரர்களை தங்கள் வசம் வைத்துள்ள பெங்களூரு அணிக்கு கேமரூன் கிரீன் ப்ளஸ் பாய்ண்ட்டாக பார்க்கப்பட்டார். கேமரூன் கிரீனை பெங்களூரு அணி 17 கோடியே 50 லட்சத்துக்கு டிரேட் செய்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் இன்றைக்கு வரலாறாக மாறியுள்ளது.
நம்பிக்கை கொடுக்கும் கேமரூன் கிரீன்
கேமரூன் கிரீனை மும்பை அணி பெங்களூரு அணியிடம் ட்ரேட் செய்வதற்காக அனுகியபோது, பெங்களூரு அணி கிட்டத்தட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா மொமண்ட் என்றுதான் கூறவேண்டும். டீல் ஓகே என்று மறுகணமே பெங்களூரு அணி கேமரூன் கிரீனை ட்ரேட் செய்துகொண்டது. அதற்கு முக்கிய காரணம் கேமரூன் கிரீன் வளர்ந்து வரும் திறமை மிக்க இளம் ஆல் ரவுண்டர். இவரது சிக்ஸர் விளாசும் திறன் எதிரணி வீரர்களுக்கு குடைச்சலை ஏற்படுத்தும். மேலும் மிதவேகமாக பந்து வீசும் திறன் கொண்டவர் என்பதால் கேமரூன் கிரீனை வைத்து குறைந்த பட்சம் 2 ஓவர்களும் அதிகபட்சம் 4 ஓவர்களும் தேத்தி விடலாம் என பெங்களூரு அணி திட்டம் போட்டுள்ளது. 4 வெளிநாட்டு வீரர்கள்தான் ப்ளேயிங் லெவனில் களமிறங்கமுடியும் என்பதால் கேமரூன் கிரீனுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியின் மேக்ஸ் வெல் பெங்களூரு அணியில் தவிர்க்க முடியாத வீரராக இருக்கின்றார். மேக்ஸ்வெல்லுடன் இணைந்து கேமரூன் கிரீன் இணைந்து பெங்களூரு அணிக்கு சிறப்பான பங்களிப்பை ஏற்படுத்துவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கேமரூன் கிரீன் ஐபிஎல் ப்ரோஃபைல்
கேமரூன் கிரீனைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டில் இருந்துதான் ஐபிஎல் விளையாடுகின்றார். கடந்த ஆண்டில் மொத்தம் 16 போட்டிகளில் விளையாடியுள்ள கேமரூன் கிரீன் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதம் உட்பட மொத்தம் 452 ரன்கள் குவித்தார். இதில் மொத்தம் 40 பவுண்டரியும் 22 சிக்ஸரும் அடங்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கேமரூன் கிரீன் இறுதி நேரத்தில் களமிறங்கி சிக்ஸர்கள் விளாசும் திறன் கொண்டவர் என்றாலும் இளம் வீரர் என்பதால் அழுத்தத்தை கையாள்வதில் கொஞ்சம் தடுமாறுகின்றார் என்பதையும் களத்தில் காண முடிந்தது. பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் 16 இன்னிங்ஸிலும் சேர்த்து 38 ஓவர்கள் பந்து வீசியுள்ளார். இதில் 361 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
வழக்கமாக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் என்றால் அவர்களிடத்தில் ஆக்ரோசம் என்பது இயல்பாகவே இருக்கும். மும்பை அணியில் இருந்து பெங்களூரு அணிக்கு வந்துள்ள கேமரூன் கிரீனை அந்த ஆக்ரோசம் சென்னை அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கும்போது இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். கடந்த ஐபிஎல் லீக்கில் தனது முதல் ஐபிஎல் போட்டியை பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடி தொடங்கிய கேமரூன் கிரின் இந்த ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடவுள்ளார்.