Virat Kohli: விராட் கோலிக்கு ஆபத்து? எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியை ரத்து செய்த ஆர்.சி.பி.!
IPL 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியை, விராட் கோலியின் பாதுகாப்பு கருதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ரத்து செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. நேற்று நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் வெற்றி பெற்று கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று குவாலிபயர் 2வது இடத்திற்கு செல்லப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் எலிமினேட்டர் சுற்று நடைபெற உள்ளது.
விராட் கோலிக்கு ஆபத்து?
இந்த சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேருக்கு நேர் மோதுகிறது. இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும் என்பதால் இரு அணிகளும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் களமிறங்குகிறது.
இரு அணிகளும் மோதும் இந்த போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடக்கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் அணி தங்களது வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர். விராட்கோலியின் பாதுகாப்புக்கு ஆபத்து இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, ஆர்.சி.பி. அணி தங்களது பயிற்சியை ரத்து செய்தனர்.
பயிற்சியை ரத்து செய்த ஆர்.சி.பி:
அவர்களது அட்டவணைப்படி, குஜராத் கல்லூரி மைதானத்தில் ஆர்.சி.பி. அணி தங்களது பயிற்சியை இன்று மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அங்கு செல்லவில்லை. மேலும், இதே பாதுகாப்பு காரணங்களால் பத்திரிகையாளர் சந்திப்பையும் ஆர்.சி.பி.. அணி நடத்தவில்லை. தீவிரவாத நடவடிக்கை இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் பயிற்சியை ஆர்.சி.பி. அணி ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரி விஜய்சிங்கா ஜூவாலா கூறும்போது, விராட் கோலி இந்த கைது குறித்து அகமதாபாத் வரும்போதே கேள்விப்பட்டிருக்கலாம். அவர் நாட்டின் சொத்து. அவரது பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் பிரதானம். ஆர்.சி.பி. அணி ஆபத்தான முடிவு எடுக்க தயாராகவில்லை. இதையடுத்து, அவர்கள் வலைப்பயிற்சியை ரத்து செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருக்கும் முறையான தகவல் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
மேலும், ஆர்.சி.பி. வீரர்கள் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மிகவும் முக்கியமான போட்டி நடைபெற உள்ள நிலையில், விராட் கோலியின் பாதுகாப்பில் ஆபத்து இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். திருவிழாவிற்கு போலீசார் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அதேசமயம், நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலுக்கும் தீவிர பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி குவாலிபயர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் சென்னையில் மோதுவார்கள். அந்த போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் கொல்கத்தாவுடன் மோதுவார்கள்.
மேலும் படிக்க: USA vs BAN: முதல் வெற்றியே முத்தான வெற்றி..! வங்கதேச அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்த அமெரிக்கா அணி..!
மேலும் படிக்க: Team India New Head Coach: வேறு யாரும் வேணாம்! கவுதம் கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவு..?