IPL 2024 Points Table: ஆரஞ்சு தொப்பியோடு கோலி படைத்த சாதனைகள்; புள்ளிப்பட்டியலில் பெங்களூருக்கு எந்த இடம்?
IPL 2024 Points Table: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை வென்ற பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் இன்று அதாவது மார்ச் 25ஆம் தேதி பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிக்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 177 ரன்கள் இலக்கை நிர்ணயம் செய்தது. கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி தனது முதல் வெற்றியை நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வி என 2 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. முதல் ஐந்து இடங்களில் உள்ள அணிகளும் 2 புள்ளிகளுடன் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் பெங்களூரு அணி 6வது இடத்தில் உள்ளது.
புள்ளிப்பட்டியல் - பெங்களூரு மற்றும் பஞ்சாப் போட்டிகளுக்குப் பின்னர்,
ஆரஞ்சு நிறத் தொப்பியைக் கைப்பற்றிய விராட் கோலி
பெங்களூரு அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள விராட் கோலி இந்த போட்டியில் அதிரடியாகவும் பொறுப்பாகவும் விளையாடி 49 பந்துகளில் 11 பவுண்டரி இரண்டு சிக்ஸர் என மொத்தம் 77 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டிக்குப் பின்னர் ஆரஞ்சு நிறக் தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். இவர் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 21 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் 98 ரன்களுடன் ஐபிஎல் தொடரில் தற்சமயம் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதால், விராட் கோலிக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டுள்ளது.
VIRAT KOHLI COMPLETED 100 FIFTY-PLUS SCORE IN T20. 🤯
— Johns. (@CricCrazyJohns) March 25, 2024
- First Asian in the history...!!!!! pic.twitter.com/vNOcHdYOy0
அதேபோல் விராட்கோலி இந்த போட்டியில் விளாசிய அரைசத்துடன், டி20 போட்டிகளில் 100 முறை 50 மற்றும் 50-க்கு மேல் ரன்குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இந்த போட்டியில் 11 பவுண்டரிகள் விளாசியதன் மூலம் அதிக பவுண்டரிகள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோலி. இந்த 11 பவுண்டரி மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் விளாசியவர் என்ற பெருமையும் தன்வசம் வைத்துள்ளார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெறும் 17வது ஆட்டநாயகன் விருது இது. இதன் மூலம் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனியுடன் பகிர்ந்து கொள்கின்றார். முதல் இடத்தில் ரோகித் சர்மா 19 ஆட்டநாயகன் விருதுடன் உள்ளார்.