KKR vs DC Match Highlights: டாப் கிளாஸ் பவுலிங்; டெல்லியை 106 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா!
IPL 2024 KKR vs DC Match Highlights: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் தொடரின் 16வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக சுனில் நரேன் 85 ரன்களும், ரகுவன்ஷி 54 ரன்களும் ரஸல் 41 ரன்களும் ரிங்கு சிங் 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்திருந்தனர்.
அதன் பின்னர் 273 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு பவர்ப்ளேவில் இருந்தே விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ப்ரித்வி ஷா தனது விக்கெட்டினை இம்பேக்ட் ப்ளேயர் வைபவ் ஆரோரா பந்தில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் களத்தில் இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்களான மிட்ஷெல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் தங்களது விக்கெட்டினை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் பந்தில் இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த போரல் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆக டெல்லி அணி நெருக்கடிக்கு ஆளானது.
இதனால் டெல்லி அணி நெருக்கடிக்கு ஆளானது. அதன் பின்னர் இணைந்த ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் கூட்டணி தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க சிறப்பாக விளையாடினர். கிடைத்த பந்துகளை மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களாக மாற்றினர்.
ரிஷப் பண்ட் சிறப்பாக அரைசதம் விளாசி தனது விக்கெட்டினை இழந்தார். ரிஷப் பண்ட் கொல்கத்தா அணியின் வெங்கடேஷ் ஐயர் வீசிய ஒரு ஓவரில் 28 ரன்கள் சேர்த்து மிரள வைத்தார். ரிஷப் பண்ட்டுக்குப் பின்னர் வந்த அக்ஷர் பட்டேல் முதல் பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
ஆனாலும் களத்தில் இருந்த ஸ்டப்ஸ் உத்வேகத்தைக் குறைக்காமல் அதிரடியாக அரைசதம் விளாசி மிரட்டிவிட்டார். ஆனால் அதன் பின்னர் 54 ரன்னில் தனது விக்கெட்டினை இழக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் தாக்குபிடிக்குமா என்ற கேள்வி எழத் தொடங்கியது.
இறுதியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்கள் மட்டும் எடுத்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கொல்கத்தா அணி சார்பில் வைபவ் அரோரா மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா மூன்று விக்கெட்கள் கைப்பற்றினர். ஸ்டார்க் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்குச் சென்றுள்ளது.