IPL 2024: ஐ.பி.எல் ஆடும் 10 அணிகளின் பயிற்சியாளர்கள் யார்? யார்? முழு லிஸ்ட் இதோ!
IPL 2024: ஐ.பி.எல். மகுடம் சூட களமிறங்கும் 10 அணிகளின் பயிற்சியாளர்கள் யார்? யார்? என்பதை கீழே காணலாம்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. கோப்பையை கைப்பற்றியே தீர வேண்டும் என்று 10 அணிகள் களத்தில் இறங்குகின்றன. 10 அணிகளிலும் திறமையான வீரர்கள், கேப்டன்கள் இருந்தாலும் அந்தந்த அணியை வழிநடத்த அனுபவமும், திறமையும் நிறைந்த பயிற்சியாளர்கள் உள்ளனர். 10 அணிகளின் பயிற்சியாளர்கள் யார்? யார்? என்று கீழே காணலாம்.
- ஸ்டீபன் ப்ளெமிங்: ( சென்னை சூப்பர் கிங்ஸ்)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2009ம் ஆண்டு முதல் பயிற்சியாளராக இருந்து வருபவர் ஸ்டீபன் ப்ளெமிங். இன்றைய சிறார்கள் பலருக்கும் ஸ்டீபன் ப்ளெமிங்கை ஒரு பயிற்சியாளராக மட்டுமே தெரியும். ஆனால், அவர் உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். நியூசிலாந்து அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த ப்ளெமிங் 111 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதம், 3 இரட்டை சதம், 46 அரைசதம் உள்பட 7 ஆயிரத்து 172 ரன்களும், 280 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8 சதம், 49 அரைசதம் உள்பட 8 ஆயிரத்து 37 ரன்களையும், 5 டி20 போட்டிகளில் ஆடி 110 ரன்களையும், 10 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 196 ரன்களும் எடுத்துள்ளார். 10 ஐ.பி.எல். போட்டிகளும் சென்னை அணிக்காக முதல் சீசனில் ஆடினார். 50 வயதான ப்ளெமிங் பயிற்சியில் சென்னை 5 கோப்பைகளை வென்றுள்ளது.
- ஆஷிஷ் நெஹ்ரா: (குஜராத் டைட்டன்ஸ்)
2011ம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. ஜாம்பவான் அணிகளுக்கு மத்தியில் மற்ற அணிகளில் இருந்து கழட்டி விடப்பட்ட வீரர்களை கொண்டு உருவாக்கப்பட்ட அணியை கொண்டு முதல் சீசனிலே கோப்பையை கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது குஜராத் அணி. குஜராத் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு வகிப்பவர் நெஹ்ரா. கடந்த 2 சீசனிலும் நெஹ்ராவின் பயிற்சியும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவரை இந்திய அணியின் பயிற்சியாளராக்க வேண்டும் என்றும் கருத்துக்கள் எழுந்தது. 1999 முதல் 2017ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக கிரிக்கெட் ஆடிய நெஹ்ரா 17 டெஸ்ட்டில் 44 விக்கெட்டுகளையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளையும், 27 டி20களில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 88 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
- ரிக்கி பாண்டிங் ( டெல்லி கேபிடல்ஸ்)
95கள் முதல் 2005 வரை உலக கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய அணி யாராலும் வீழ்த்தவே முடியாத அணியாக உலா வந்ததற்கு ரிக்கி பாண்டிங் மிகப்பெரிய காரணம். குறிப்பாக, தோனியின் வருகைக்கு முன்பு கேப்டன் என்றால் அனைவரும் உதாரணமாக காட்டுவது ரிக்கி பாண்டிங்கையே. அந்தளவு ஆஸ்திரேலிய அணிக்காக வெற்றியை பெற்றுத்தந்தவர். களத்தில் மிக தைரியமான முடிவை எடுக்கும் அவரது தலைமையில் ஆஸ்திரேலிய 2 உலகக்கோப்பையை வென்றுள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் 168 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 41 சதம், 6 இரட்டை சதம், 62 அரைசதம் உள்பட 13 ஆயிரத்து 378 ரன்களும், 375 ஒருநாள் போட்டிகளில் ஆடி 30 சதங்கள், 82 அரைசதங்கள் விளாசி 13 ஆயிரத்து 704 ரன்களும் எடுத்துள்ளார். 17 டி20 போட்டிகளில் ஆடி 401 ரன்களும், 10 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 91 ரன்களும் எடுத்துள்ளார். டெல்லி அணிக்கு மிகப்பெரிய பலமாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளார்.
- சந்திரகாந்த் பண்டிட்: ( கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
ஐ.பி.எல். அணிகளிலும் ஆடும் அணிகளில் 2 முறை கோப்பையை வென்ற அணியும், எப்போதும் எதிரணிகளுக்கு ஆபத்தான அணியாகவும் இருக்கும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த அணிக்கு பயிற்சியாளராக இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரகாந்த் பண்டிட். இவர் 1986 முதல் 1992ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடியுள்ளார். விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேனான இவர் 5 டெஸ்ட்டில் ஆடி 171 ரன்களையும், 36 ஒருநாள் போட்டிகளில் ஆடி 290 ரன்களையும், 138 முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 22 சதங்கள், 42 அரைசதங்களுடன் 8 ஆயிரத்து 209 ரன்களும், 101 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி 14 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 33 ரன்களும் எடுத்துள்ளார். 63 வயதான சந்திரகாந்த் பண்டிட்டின் அனுபவம் கே.கே.ஆருக்கு பலமாக உள்ளது.
- ஜஸ்டின் லாங்கர்: ( லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)
ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே லாங்கருக்கு ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 53 வயதான ஜஸ்டின் லாங்கர் 105 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 23 சதங்கள், 3 இரட்டை சதங்கள் மற்றும் 30 அரைசதங்களுடன் 7 ஆயிரத்து 696 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் போலவே முதல் சீசனிலே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இரண்டு சீசனிலும் அவர்கள் அசத்தலான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சீசனிலும் லாங்கர் பயிற்சியின் கீழ் லக்னோ அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- மார்க் பவுச்சர்: (மும்பை இந்தியன்ஸ்)
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ள அணி மும்பை இந்தியன்ஸ். பலம் பொருந்திய மும்பை அணிக்கு பயிற்சியாளராக இருப்பவர் மார்க் பவுச்சர். 47 வயதான மார்க் பவுச்சர் தென்னாப்பிரிக்க அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 147 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 35 அரைசதங்கள் உள்பட 5 ஆயிரத்து 515 ரன்களும், 295 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1 சதம் மற்றும் 26 அரைசதங்கள் உள்பட 4 ஆயிரத்து 686 ரன்களும் எடுத்துள்ளார். 25 டி20 போட்டிகளில் ஆடி 268 ரன்களும், 31 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதம் உள்பட 394 ரன்களும் எடுத்துள்ளார். ரோகித் சர்மா தலைமையில் மட்டுமே களம் கண்டு ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வந்த மும்பை அணி, இந்த முறை ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்க உள்ளது. புதிய கேப்டன் தலைமையில் மும்பை அணியை எப்படி மார்க் பவுச்சர் வழிநடத்தப் போகிறார்? என்பதே சவாலான ஒன்றாகும்.
7.ட்ரெவர் பெய்லிஸ் ( பஞ்சாப் கிங்ஸ்)
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளே ஆடாமல் ஐ.பி.எல்.லில் பயிற்சியாளராக இருக்கும் ஒரே நபர் ட்ரெவர் பெய்லிஸ். 63 வயதான ட்ரெவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இவர் 58 முதல் தர போட்டிகளில் ஆடி 5 சதங்கள், 15 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 60 ரன்களையும், 50 லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஆடி1 சதம், 6 அரைசதம் உள்பட 1196 ரன்களையும் எடுத்துள்ளார். வீரராக பெரிதும் அறியப்படாத ட்ரெவர் பயிற்சியாளராக பெரும் வெற்றி கண்டவர். நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு மகுடம் பெற்றுத் தந்துள்ளார்.
2007ம் ஆண்டு இலங்கை அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு வந்த இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்தவர் இவரே. பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்து வெற்றி பெற்றுத் தந்தார். 2012ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு மகுடம் சூடி தந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் பயிற்சியாளராகவும் தொடர்கிறார். பயிற்சியாளராக வெற்றி பெற்ற ட்ரெவர் பஞ்சாப் அணிக்கு வெற்றியை பெற்றுத் தருவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
8. குமார் சங்ககரா: ( ராஜஸ்தான் ராயல்ஸ்)
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் குமார் சங்ககரா. 2011ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை இலங்கை அணியை வழிநடத்தியவர். 46 வயதான சங்ககரா 134 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 38 சதங்கள், 11 இரட்டை சதங்கள் மற்றும் 52 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 400 ரன்களை எடுத்துள்ளார். 404 ஒருநாள் போட்டிகளில் ஆடி 25 சதங்கள் மற்றும் 93 அரைசதங்கள் உள்பட 14 ஆயிரத்து 234 ரன்கள் எடுத்துள்ளார். 56 டி20 போட்டிகளில் 1382 ரன்களும், 71 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 10 அரைசதங்கள் உள்பட 1687 ரன்களும் எடுத்துள்ளார். சிறந்த அனுபவம் கொண்ட சங்ககரா பயிற்சியின் கீழ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.
9. டேனியல் வெட்டோரி:
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டேனியல் வெட்டோரி. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வெட்டோரி 113 போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 23 அரைசதங்கள் உள்பட 4 ஆயிரத்து 531 ரன்களும், 295 ஒருநாள் போட்டிகளில் ஆடி 4 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 253 ரன்களும், 34 டி20 போட்டிகளில் ஆடி 205 ரன்களும், 34 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 121 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 362 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 305 விக்கெட்டுகளும், டி20 போட்டிகளில் 38 விக்கெட்டுகளும், ஐ.பி.எல். தொடரில் 28 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி பயிற்சியின் கீழ் அந்த அணி சாம்பியன் படட்த்தை மீண்டும் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
10. சஞ்சய் பங்கர் ( ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
ஐ.பி.எல். தொடரில் கோப்பையை இதுவரை வெல்லாவிட்டாலும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள ஒரே அணி ஆர்.சி.பி. விராட் கோலி ஆடும் இந்த அணிக்கு பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் உள்ளார். சஞ்சய் பங்கர் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம் உள்பட 470 ரன்களும், 15 ஒருநாள் போட்டிகளில் ஆடி 57 ரன்களும், 12 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 49 ரன்களும் எடுத்துள்ளார். டெஸ்டில் 7 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டும், ஐ.பி.எல் தொடரில் 4 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். இந்த சீசனிலாவது ஆர்.சி.பி.க்கு சஞ்சய் பங்கர் மகுடத்தை பெற்றுத்தருவாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.