GT vs PBKS Innings Highlights: ’கிங்’ ஆக மாறிய கில்; பஞ்சரான பஞ்சாப் பவுலிங்; 199 ரன்கள் குவித்த குஜராத்!
IPL 2024 GT vs PBKS Innings Highlights: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 199 ரன்கள் சேர்த்தது.
![GT vs PBKS Innings Highlights: ’கிங்’ ஆக மாறிய கில்; பஞ்சரான பஞ்சாப் பவுலிங்; 199 ரன்கள் குவித்த குஜராத்! IPL 2024 GT vs PBKS Innings Highlights Gujarat Titans Gives 200 Runs Target Punjab Kings Shubman Gill Half Century GT vs PBKS Innings Highlights: ’கிங்’ ஆக மாறிய கில்; பஞ்சரான பஞ்சாப் பவுலிங்; 199 ரன்கள் குவித்த குஜராத்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/04/a446bf01a0f2720ec018660960f0ea1e1712244401586102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார்.
குஜராத் அணியின் இன்னிங்ஸை கேப்டன் சுப்மன் கில்லும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹாவும் தொடங்கினர். முதல் ஓவரின் கடைசிப் பந்தினை சிக்ஸருக்கு விளாசிய சுப்மன் கில் குஜராத் அணிக்கு துள்ளலான தொடக்கத்தினைக் கொடுத்தார். இருவரும் இணைந்து குஜராத் அணிக்கு அதிரடியாக ரன்கள் குவிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்தில் விருத்திமான் சஹா தனது விக்கெட்டினை 11 பந்தில் 13 ரன்கள் சேர்த்த நிலையில், ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த கேன் வில்லியம்சன் களமிறங்கினார். கிடைத்த பந்துகளை அவரும் பவுண்டரிக்கு விளாசினார். பவர்ப்ளே முடிவில் குஜராத் அணி 52 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னரும் கில் - வில் கூட்டணி பொறுப்பாக ரன்கள் சேர்த்தது. போட்டியின் 10வது ஓவரில் கேன் வில்லியம்சன் ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் 22 பந்தில் 26 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
முக்கிய விக்கெட்டுகள் விழுந்தாலும் கேப்டன் கில் சிறப்பான ஆட்டத்தினை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தார். இவருக்கு துணையாக சாய் சுதர்சனும் இணைந்து கொள்ள, அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்தது. இவர்கள் கூட்டணியால் குஜராத் அணி 11.4 ஓவரில் 100 ரன்களை எட்டியது. இருவரும் லாவகமாக வந்த பந்துகளை பவுண்டரிக்கு அதிரடியாக விளாசினர். இளம் வீரர்கள் என்பதால், ஓடி ரன்கள் சேர்ப்பதிலும் கவனமாக செயல்பட்டனர். இவர்கள் கூட்டணி 27 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது.
அதிரடியாக விளையாடி வந்த சுதர்சன் தனது விக்கெட்டினை 19 பந்தில் 33 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அதன் பின்னர் கில்லுடன் விஜய் ஷங்கர் கைகோர்த்தார். விஜய் சங்கர் அதிரடியாக விளையாடாமல் தடுமாறிக்கொண்டு வந்தார். ஆனால் கில் எதைப்பற்றியும் கவலைப்படாமால் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். கில் 31 பந்தில் அரைசதத்தினைக் கடந்தது மட்டும் இல்லாமல் அணியை நல்ல ஸ்கோர் குவிக்க வேண்டும் எனும் நோக்கில் விளையாடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தனது முதல் அரைசதமாக இதனைப் பதிவு செய்தார்.
இறுதியில் குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் சேர்த்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)