உஷார்! போலி டிக்கெட்டுகளால் ஏமாறும் சி.எஸ்.கே. ரசிகர்கள் - முடிவுக்கு வருவது எப்போது?
சி.எஸ்.கே. அணி சென்னையில் ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை போலியாக அச்சிட்டு இணையத்தில் சில மோசடி கும்பல்கள் ரசிகர்களை ஏமாற்றி வருகின்றனர்.
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் ஆடினாலும், நூற்றுக்கணக்கான களத்தில் இறங்கினாலும், பல சாதனைகளை பலர் படைத்தாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த ஐ.பி.எல். தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பது மூன்றே மூன்று வீரர்களின் ஆட்டத்தையும், அவர்களின் வெற்றியையும் பொறுத்தே அமையும். எம்.எஸ்.தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மா ஆகியோர்தான் அந்த மூன்று பேர் ஆவார்கள்.
சென்னை அணி மீதான மோகம்:
இதன் காரணமாகவே, ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் ஆடினாலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் உள்ளன. ரோகித் மற்றும் கோலி இரண்டு பேருக்குமே கேப்டனாக பணியாற்றியவரும், இரண்டு பேரையும் விட சீனியராக திகழ்பவர் தோனி. கடந்த சில சீசன்களாகவே தோனிக்கு கடைசி சீசன் இதுதானா? என்ற எதிர்பார்ப்புடனே ஒவ்வொரு ஐ.பி.எல் தொடரும் நகர்கிறது.
இதன் காரணமாக, கடந்த சில சீசன்களாகவே முன்பை காட்டிலும் சென்னை அணி ஆடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் மிகவும் கூடுதலாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு வரை நேரில் நடைபெற்று வந்த டிக்கெட் விநியோகம் தற்போது இணையத்தில் மட்டும் நடத்தப்படும் என்று சென்னை அணி அறிவித்து விட்டது.
டிக்கெட் விற்பனை மோசடி:
இதன்காரணமாக, சி.எஸ்.கே. அணி ஆடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற ரசிகர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மைதானத்திலும் ஐ.பி.எல். போட்டிகளின் ஆரம்ப விலை மாறி, மாறி உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் தொடக்க விலை ரூபாய் 499 மட்டுமே. இன்று ஹைதரபாத் அணிக்கு எதிராக ஹைதரபாத் மண்ணில் ஆடும் சென்னைக்கு அணியின் போட்டியின் தொடக்க விலை ரூபாய் 700 மட்டுமே. ஆனால், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சி.எஸ்.கே. அணியின் தொடக்க விலை ரூபாய் 1700 ஆகும்.
இது மட்டுமின்றி சி.எஸ்.கே. போட்டியின் டிக்கெட்டுகளும் இணையத்தில் மட்டும் விற்பனை செய்யப்படுவதால், போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து பலரும் பித்தலாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் டிக்கெட் வாங்கும் ஆர்வத்தில் முன்பின் தெரியாதவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடுகிறார்கள்.
முடிவுக்கு வருமா பித்தலாட்டம்?
தோனியின் கடைசி கால ஐ.பி.எல். என்பதால், அதைப்பயன்படுத்தி சில மோசடி பேர்வழிகள் ரசிகர்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகின்றனர். சென்னை – பெங்களூர் அணிகள் மோதிய முதல் போட்டியில் பல ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து போலி டிக்கெட்டுகள் வாங்கி மைதானத்திற்கு வெளியில் நின்ற ரசிகர்களையும் நாம் காண முடிந்தது. மேலும், டிக்கெட்டுகளை இணையத்தில் வாங்க நுழைந்தால் பெரும்பாலான நேரங்களில் டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது என்றும், நமக்கு முன்பு குறைந்தது 50 ஆயிரம் பேராவது காத்திருக்கிறார்கள் என்றுமே சென்னை அணிக்கான போட்டிக்கு வருகிறது.
இதனால், இந்த குறைபாடுகளை எல்லாம் நீக்கி ரசிகர்கள் ஏமாறாத வகையில் டிக்கெட் விற்பனையை நடத்திட வேண்டும் என்றும், போலி டிக்கெட்டுகள் விற்பனையை தடுத்திட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: IPL 2024: மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை, ஹைதராபாத் அணிகள்? - இன்று நேருக்கு நேர் மோதல்!
மேலும் படிக்க: Mayank Yadav: "அவர் கிருஷ்ணரின் பக்தர்" மயங்க் யாதவ் அசைவம் சாப்பிடாதததற்கு காரணம் இதுதானா?