(Source: ECI/ABP News/ABP Majha)
CSK vs SRH: கரண்ட் பில் கட்டல.. ஃபியூஸை பிடிங்கிய மின் வாரியம்; சிக்கலில் சி.எஸ்.கே., மேட்ச்!
IPL 2024 CSK vs SRH: ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மின்சாரக் கட்டணம் செலுத்தாததால், மின்வாரியம் ராஜீவ் காந்தி மைதானத்திற்கு வழங்கி வந்த மின்சாரத்தை துண்டித்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரில் நாளை அதாவது ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. நடப்பு தொடரில் 18வது லீக் போட்டியாக நடைபெறும் இந்த போட்டி, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நாளை போட்டி நடைபெறவுள்ள ராஜீவ்காந்தி மைதானத்திற்கான மின்சார இணைப்பை , தெலுங்கானா மாநில மின்சார வாரியம் துண்டித்துள்ளது. மின்சாரக் கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாததால் மின்வாரியம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மின்சார நிலுவைத் தொகை தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே தெலுங்கானா மாநில தெற்கு மின்பகிர்மான நிறுவனத்தின் தரப்பில் இருந்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. ஆனால் மின்சார நிறுவனம் கொடுத்த நோட்டீஸ்க்கு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தரப்பில் இருந்து எந்த விதமான பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி மின்சார கட்டண நிலுவைத் தொகையான ரூபாய் ஒரு கோடியே 67 லட்சத்தினை செலுத்துமாறு, ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்ட நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தரப்பில் இருந்து எந்தவிதமான பதிலும் வராததால், தெற்கு மின்பகிர்மான நிறுவனம் மின்சாரத்தை துண்டித்துள்ளது. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளில் மைதான பராமரிப்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மைதானத்தினை நாளைய போட்டிக்கு தயார் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை போட்டி நடக்குமா இல்லையா என ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், நாளைய போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இதற்கான தீர்வு எட்டப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.