MS Dhoni: ஐபிஎல்லில் அதிக வெற்றியை தொட்ட முதல் வீரர்.. புதிய வரலாறு படைத்த எம்.எஸ்.தோனி..!
ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார்.
ஐபிஎல் 2024ன் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது எம்.எஸ்.தோனி பேட்டிங் செய்ய வந்தார். கடைசி ஓவரில் பேட்டிங் செய்ய வந்த அவர், 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Dhoni entry at Chepauk during game #CSKvsSRH captains cool #MSDhoni𓃵 #RuturajGaikwad pic.twitter.com/FeVVu3U7w7
— DHEERAJ KUMAR (@dheeraj9887) April 29, 2024
வழக்கம்போல் தோனி பேட்டிங் செய்ய உள்ளே வந்ததும், ரசிகர்களின் ஆரவாரத்தால் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் அதிர தொடங்கியது. இது ஒருபுறம் இருக்க, தோனி களமிறங்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு சாதனை படைக்கப்பட்டு வருகிறது. நேற்றைய போட்டியிலும் கூட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கூட எட்டாத ஐபிஎல் சாதனையை தோனி தனது பெயரில் பதிவு செய்தார்.
அப்படி என்ன சாதனை..?
ஐபிஎல் வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றார். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் ரோஹித் சர்மா, விராட் கோலி கூட இந்த சாதனையை இதுவரை தொடவில்லை. ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோனி 150வது ஐபிஎல் வெற்றியில் ஒரு வீரராக இருந்தார்.
கேப்டனாக பார்க்காமல் தோனி ஒரு வீரராக பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 135 வெற்றிகளையும், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 15 வெற்றிகளையும் பெற்றுள்ளார்.
2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அந்த இரண்டு வருடங்கள் தோனி, ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் தொடரில் அதிக முறை விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள தோனி, தனது 259வது போட்டியில் விளையாடி 150வது வெற்றியை குவித்தார். மேலும், கேப்டனாக அவர் 133 வெற்றிகளை கேப்டனாக பெற்றுள்ளார்.
அதிக ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள்:
- தோனி- 150 வெற்றி
- ரவீந்திர ஜடேஜா- 133 வெற்றி
- ரோஹித் சர்மா- 133 வெற்றி
- தினேஷ் கார்த்திக்- 125 வெற்றி
- சுரேஷ் ரெய்னா- 125 வெற்றி
259 போட்டிகளில் (225 இன்னிங்ஸ்) தோனி 137.12 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில், 39.52 என்ற சராசரியுடன் மொத்தம் 5,178 ரன்களை குவித்துள்ளார். இதில், 24 அரைசதங்களும் அடங்கும். தோனி 358 பவுண்டரிகள் மற்றும் 247 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.
தோனி ஐபிஎல்லில் விக்கெட் கீப்பராக 148 கேட்சுகள் மற்றும் 42 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஒரு கேப்டனாக தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இதற்கிடையில், ஐபிஎல்லில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். இவர் 39.82 சராசரியில் 4,660 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024ல் தோனி இதுவரை ஆட்டமிழக்கவில்லை:
ஐபிஎல் 2024ல் மகேந்திர சிங் தோனி 259.46 என்ற இரண்டாவது அதிகபட்ச பேட்டிங் ஸ்டிரைக் ரேட்டைக் கொண்டுள்ளார். மேலும் இந்த சீசனில் 9 போட்டிகள் விளையாடியுள்ள அவர், 7 இன்னிங்ஸ்களில் களமிறங்கி 96 ரன்கள் எடுத்துள்ளார். ஒருமுறை கூட தோனி இதுவரை அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.