CSK vs RR Innings Highlights: எடுபடாத ராஜஸ்தான் பேட்டிங்; சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு 142 ரன்கள் இலக்கு!
IPL 2024 CSK vs RR Innings Highlights: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்தது.
நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் மோதிக்கொண்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது சொந்த மைதானத்தில் களமிறங்கும் கடைசி போட்டி இது என்பதால் இந்த போட்டியின் மீது அதிக ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். அதன் அடிப்படையில் சென்னை அணி பவுலிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ராஜ்ஸ்தான் அணியின் இன்னிங்ஸை ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் தொடங்கினர். ஆடுகளம் பவுலர்களுக்கு சாதகமாக இருந்ததால், பேட்டிங் செய்வதற்கு எதிர்பார்த்ததைவிடவும் சவாலகவே இருந்தது.
இதனால் ராஜஸ்தான் அணியால் அதிரடியாக ரன்கள் குவிக்க முடியவில்லை. அதேபோல் சென்னை அணியால் விக்கெட்டும் கைப்பற்ற முடியவில்லை. சென்னை அணியின் கட்டுக்கோப்பான பந்து வீச்சினால் ராஜஸ்தான் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் எதையும் இழக்காமல் 42 ரன்கள் சேர்த்து விளையாடியது. 7வது ஓவரில் ஜெய்ஸ்வாலும், 8வது ஓவரில் பட்லரும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர். அடுத்து கைகோர்த்த கேப்டன் சாம்சன் மற்றும் ரியான் பிராக் கூட்டணி அதிரடியாக விளையாடவில்லை என்றாலும் நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர்.
15வது ஓவரின் இரண்டாவது பந்தில் கேப்டன் சாம்சன் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் சென்னை அணியின் சமர்ஜீத் சிங் கைப்பற்றினார். சாம்சன் விக்கெட்டினை இழந்த பின்னர் களமிறங்கிய துருவ் ஜுரேல், ரியான் பிராகுடன் இணைந்து அதிரடியாக விளையாடவேண்டும் என்பதில் கவனம் செலுத்தினார். ஆனால் மைதானத்தின் தன்மை பந்து வீச்சுக்கு நன்கு சாதகமாக இருந்ததால் சென்னை அணியின் ஆட்டமும் சிறப்பாகவே இருந்தது.
20வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் தேஷ்பாண்டே அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிவிட்டார். இறுதியில் ராஜஸ்தான் ரயால்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்தது.