IPL 2023, RCB vs GT 1st Innings Highlights: ஒன் மேன் ஷோ காட்டிய விராட்; சதம் விளாசி அசத்தல்; குஜராத்துக்கு 198 ரன்கள் இலக்கு..!
IPL 2023, RCB vs GT: இந்த சதம் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் சேர்த்தது.
IPL 2023, RCB vs GT: விறுவிறுப்பான ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றது. இதில் 70வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றது. போட்டி நடைபெறும் சின்னச்சாமி மைதானத்தில் இன்று மதியம் முதல் மழை பெய்து வந்ததால் போட்டி நடைபெறுமா நடக்காதா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது. இந்நிலையில், போட்டி மழையால் தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது.
அதன்படி பெங்களூரு அணி பேட்டிங்கைத் தொடங்கியது. மழையால் பெங்களூரு அணிக்கு இந்த ஆடுகளம் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி, பாஃப் டூ பிளசிஸ் ஜோடி குஜராத் பந்து வீச்சினை துவம்சம் செய்தது. இதனால் ஓவருக்கு 10 ரன்கள் என்ற ரன்ரேட்டை இவர்கள் சீராக கொண்டு சென்றனர். இவர்களது விக்கெட்டை எடுக்க குஜராத் அணி தன்னிடம் இருந்த பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனால் இவர்கள் அனைவரது பந்து வீச்சும் விராட் - பிளசிஸ் ஜோடியிடம் எடுபடவில்லை. அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளையும் விளாசினர்.
பவர்ப்ளேவில் அதிரடியாக ஆடி வந்த இந்த ஜோடி அதன் பின்னர் பிரிந்தது. 8வது ஓவரில் நூர் அகமது பந்து வீச்சில் டூ பிளசிஸ் எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் பெங்களூரு அணியின் ரன்ரேட் குறைந்தது. அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல், லோம்ரோர் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, போட்டியில் குஜராத் அணியின் கரங்கள் உயர்ந்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி தனது அரைசதத்தினை 35 பந்துகளில் தனது அரைசத்தினை எட்டிய பின்னரும் பொறுப்புடன் ஆடிவந்தார். ப்ரேஸ்வெல் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டை இழந்து வெளியேற பெங்களூரு அணி நெருக்கடிக்கடிக்கு ஆளானது. ஆனால் களத்தில் விராட் கோலி இருக்கும் வரை குஜராத் அணிக்கு சலான ஸ்கோரை இலக்காக கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை பெங்களூரு அணிக்கு இருந்தது.
இறுதியில் அவர் தனது 7வது சதத்தினை 60 பந்துகளில் எட்டினார். இந்த சதம் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி 61 பந்துகளில் 101 ரன்கள் விளாசி விராட் கோலி இறுதி வரை தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் இருந்தார்.