RCB Replacements: காயத்தால் விலகிய முக்கிய வீரர்கள்..! மாற்று வீரர்களை அறிவித்த பெங்களூரு அணி..!
காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்துள்ளது.
காயத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இரண்டு வீரர்களுக்கான மாற்று வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அறிவித்துள்ளது. அதன்படி, ரீஸ் டாப்லி மற்றும் ரஜத் படிதார் ஆகியோருக்கான மாற்று வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
16வது ஐபிஎல் சீசன்:
16வது ஐபிஎல் சீசன் 10 அணிகளுடன் கடந்த 31ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நாட்டின் பல்வேறு நகரங்களில் இதுவரை 9 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதனிடையே, ஏலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு அணிகளை சார்ந்த வீரர்களும் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காயங்களால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது தொடர்கதையாகி வருகிறது. நடப்பாண்டு தொடரின் முதல் லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக பீல்டிங் செய்யும்போது, காலில் ஏற்பட்ட காயத்தால் குஜராத் அணி வீரர் வில்லியம்சன் தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார். அந்த வரிசையில் தற்போது பலரும் இணைந்துள்ளனர்.
பெங்களூரு வீரர்கள் காயம்:
காயமடைந்த வீரர்களின் பட்டியலில் பெங்களூரு அணியை சேர்ந்த ரீஸ் டாப்லி மற்றும் உள்நாட்டு ஆல்-ரவுண்டரான ரஜத் படிதார் ஆகியோர் அடங்குவர். பெங்களூரு அணியின் முதல் லீக் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய டாப்லிக்கு, பீல்டிங்கின் போது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் இந்த தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய பிரதேசத்தை சேர்ந்த 29 வயதாகும் இளம் பேட்ஸ்மேனான ராஜத் படிதார் குதிகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். இவர் கடந்த சீசனில் பெங்களூரு அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மாற்று வீரர்கள் யார்?
இந்நிலையில், இங்கிலாந்து வீரரான ரீஸ் டாப்லிக்கு பதிலாக, தென்னாப்ரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான வெயின் பார்னல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதோடு ரஜத் படிதாருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த விஷக் விஜயகுமாரையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாற்று வீரராக அறிவித்துள்ளது. 26 வயதான ஆல்ரவுண்டரான விஜயகுமார், கர்நாடக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். விரைவில் இவர்கள் பெங்களூரு அணியில் இணைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு தொடரில் பெங்களூரு அணி:
நடப்பு தொடரில் பெங்களூரு அணி இதுவரை 2 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக கேப்டன் டூப்ளிசிஸ் மற்றும் விராட் கோலியின் அபார ஆட்டத்தால், பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து, வரும் 10ம் தேதி லக்னோ அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாட உள்ளது.