MI vs LSG, Eliminator Preview: கணக்கை தீர்க்குமா மும்பை? - எலிமினேட்டர் போட்டியில் லக்னோ உடன் பலப்பரீட்சை
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள எலிமினேட்டர் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
எலிமினேட்டர் போட்டி:
ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் சுற்று தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்து முடிந்த முதல் குவாலிபையர் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் அணியை வீழ்த்தி, சென்னை அணி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து, அகமதாபாத்தில் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள குஜராத் அணியுடனான இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மோத உள்ள அணி யார் என்பதை உறுதி செய்யும், எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெற உள்ளது.
லக்னோ - மும்பை பலப்பரீட்சை:
புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடித்த லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள், இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
பலம், பலவீனம்:
மும்பை அணியை பொறுத்தவரையில் எந்தவொரு ஸ்கோரை சேஸ் செய்யும் அளவிற்கு பேட்டிங்கில் வலுவாக உள்ளது. ஆனால், பந்துவீச்சு மிகவும் மோசமாக இருப்பது கவலை அளிக்கிறது. லக்னோ அணி டி-காக், ஸ்டோய்னிஷ் மற்றும் பூரானை பேட்டிங்கில் அதிகம் சார்ந்துள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்படுவது அவசியமாக உள்ளது. அதேநேரம், லக்னோ மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளுமே கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் வென்று, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதே உத்வேகத்தில் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றன. ஆனால், பிளே-ஆஃப் சுற்றில் பலமுறை விளையாடிய அனுபவம் இருப்பது மும்பை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
மைதானம் எப்படி?
சேப்பாக்கம் மைதானம் நடந்து முடியும் ஒவ்வொரு போட்டிக்கு பிறகும் தொடர்ந்து நிதானமாக மாறி வருகிறது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில், பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடி ரன் குவிக்க சிறிது நேரம் தேவைப்படும். முதலில் பேட்டிங் செய்வது எந்தவொரு அணிக்கும் சாதகமானதே, அதிலும் 165 ரன்களுக்கு அதிகமாக குவிப்பது அவசியமாகும்.
சிறந்த பேட்ஸ்மேன்:
சேப்பாக்கம் மைதானத்தில் ரன்களை குவிப்பது என்பது பேட்ஸ்மேன்களுக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது. சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டால் மட்டுமே ரன்களை குவிக்க முடியும். அந்த வகையில் மும்பை அணி வீரர் சூர்யகுமார் இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்கப்படுகிறது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 511 ரன்களை குவித்துள்ளார்.
சிறந்த பந்துவீச்சாளர்:
சென்னை அணியின் சூழலை பொருத்தமட்டில் லக்னோ அணியின் ரவி பிஷ்னோய் பந்து வீச்சாளர், மும்பை அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. நடப்பு தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கணிப்பு: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வாய்ப்பு அதிகம்