MI vs RR, Match Highlights: 1000வது போட்டி..வரலாற்று சம்பவம்.. விடாது முயற்சித்த ராஜஸ்தான்.. மும்பை த்ரில் வெற்றி
ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் ராஜஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
ரோகித் டவுட்:
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் வரலாற்றின் ஆயிரமாவது போட்டியில், ராஜஸ்தான் அணி நிர்ணயித்த 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வெறும் 3 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
கிஷன் - கேமரூன் கிரீன் கூட்டணி:
இரண்டாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேமரூன் கிரீன் ஜோடி, பொறுப்புடன் விளையாடி மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டது. கேமரூன் கிரீன் சீரான இடைவெளியில் பவுண்டரி மற்ரும் சிக்சர்களை விலாசினார். இதன் மூலம் இந்த கூட்டணி 62 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து, 28 ரன்கள் சேர்த்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் அதிரடி:
சூர்யகுமார் யாதவ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்து, அதிரடியாக தொடங்கினார். இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் கிரீன் 44 ரன்கள் சேர்த்து இருந்தபோது, அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும். அடுத்தடுத்து வீழ்ந்த விக்கெட்டுகளை தொடர்ந்து, சுழற்பந்துவீச்சை கொண்டு மும்பை அணிக்கு ராஜஸ்தான் அணி கடும் நெருக்கடி கொடுத்தது.
திலக் - சூர்யா கூட்டணி:
13வது ஓவரில் இருந்து அதிரடி காட்ட தொடங்கிய திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி, பவுண்டரிகளையும் சிக்சர்களையும் விளாசியது. இதனால் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்த கூட்டணி 50 ரன்களை சேர்த்து அசத்தியது. தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ் 55 ரன்களை சேர்த்து இருந்தபோது, போல்ட் பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார். இதில், 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் அடங்கும்.
இறுதியில் அதிரடி:
கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணி வெற்றி பெற 32 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை வீசிய சந்தீப் சர்மா, வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி ஓவரில் மும்பை வெற்றி பெர 17 ரன்கள் தேவைப்பட்டது. ஹோல்டர் வீசிய கடைசி ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் டேவிட் சிக்சராக விளாச மும்பை அணி அபார வெற்றி பெற்றது. 19.3 ஒவர்க்அளில் இலக்கை எட்டிய மும்பை அணி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார். வான்கடே மைதானத்தில் ஒரு அணி 200+ ரன்களை துரத்தி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும். ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் வென்று, மும்பை அணி வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.