KKR vs RR IPL 2023: வெறும் 13 பந்தில் அரைசதம்.. அடுத்தடுத்து படையெடுத்த சாதனைகள்.. கெத்து காட்டிய ஜெய்ஸ்வால்..!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் வேகம் காட்டியிருந்தால் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார்.
ஐபிஎல் தொடரின் 56வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 21 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உட்பட 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் படைத்த சாதனைகள்:
150 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் ஓவர் வீசிய கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா பந்தில் ஜெய்ஸ்வால் அதிரடி காட்ட தொடங்கினார். அந்த முதல் ஓவரில் மட்டும் ஜெய்ஸ்வால் மூன்று பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 2 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் அணிக்கு முதல் ஓவரில் 26 ரன்கள் கிடைத்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் படைத்தார். ஐபிஎல் 2021 ம் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 24 ரன்கள் எடுத்த பிரித்விஷாவின் சாதனையை யஷஸ்வி ஜெய்ஸ்வால் முறியடித்தார். ஒட்டுமொத்தமாக, இது ஐபிஎல் தொடரின் இரண்டாவது அதிக ரன்கள் அடிக்கப்பட்ட முதல் ஓவராகும்.
ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக ரன்கள்:
27/0 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs மும்பை இந்தியன்ஸ், சென்னை, 2011 (எக்ஸ்ட்ராஸ்: 7)
26/0 - ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கொல்கத்தா, 2023
26/0 - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா , 2013 (எக்ஸ்ட்ராஸ்: 1)
25/0 - டெல்லி கேபிடல்ஸ் vs கேகேஆர், அகமதாபாத், 2021 (எக்ஸ்ட்ராஸ்: 1)
முதல் ஓவரில் 26 ரன்கள் எடுத்ததை தொடர்ந்து ஹர்ஷித் ராணா வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி இரண்டு பந்தில் மட்டும் 10 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஜெய்ஸ்வால் ஷர்துல் தாக்கூர் வீசிய மூன்றாவது ஓவரின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் பவுண்டரிகள் பறந்தது. ஐந்தாவது பந்தில் சிங்கிள் அடித்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 14 பந்துகளில் பாட் கம்மின்ஸ் மற்றும் கேஎல் ராகுல் அரைசதம் அடித்திருந்தனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சந்திந்த முதல் 13 பந்துகள் - 6, 6, 4, 4, 2, 4, 1, 4, 6, 4, 4, 4, 1
ஐபிஎல்லில் அதிவேக அரைசதம் :
13 - யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ராஜஸ்தான் ராயல்ஸ்) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2023
14- கேஎல் ராகுல் (பஞ்சாப் கிங்ஸ்) vs டெல்லி கேப்பிடல்ஸ், மொஹாலி, 2018
14- பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) vs மும்பை இந்தியன்ஸ், புனே, 2022
யுவராஜ் சிங் சாதனையை முறியடிக்க தவறிய ஜெய்ஸ்வால்:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் கொஞ்சம் பேட்டிங்கில் வேகம் காட்டியிருந்தால் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருப்பார். டி 20 கிரிக்கெட்டில் அதி வேகமாக அரைசதம் அடித்தவர்கள் என்ற சாதனையை யுவராஜ் சிங், கிறிஸ் கெயில் மற்றும் ஹஸ்ரதுல்லா ஜசாய் ஆகியோர் 12 பந்துகளில் அரை சதத்தை பூர்த்திசெய்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம்:
12- யுவராஜ் சிங், இந்தியா vs இங்கிலாந்து, 2007
12- கிறிஸ் கெய்ல், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் vs அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், 2016
12- ஹஸ்ரதுல்லா ஜசாய், காபூல் ஜவான்ஸ் vs பல்க் லெஜண்ட்ஸ், 2018
13- மிர்சா அஹ்சன், ஆஸ்திரியா vs லக்சம்பர்க், 2019
13- சுனில் நரைன், கொமிலா vs சிட்டகாங், 2022
13- யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் vs கேகேஆர், 2023
டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் (இந்திய பேட்ஸ்மேன்):
12- யுவராஜ் சிங், இந்தியா vs இங்கிலாந்து, 2007
13- யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் vs கேகேஆர், 2023
14- கேஎல் ராகுல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs கர்நாடகா கேபிடல்ஸ், 2018
15- ராபின் உத்தப்பா, கர்நாடகா vs ஆந்திரா, 2011
15- யூசுப் பதான், KKR vசன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2014
போட்டி சுருக்கம்:
டாஸ் இழந்து முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. நட்சத்திர பேட்ஸ்மேன் வெங்கடேஷ் ஐயர் 42 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல் 4 வீரர்களை 25 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். இதில் கேப்டன் நிதிஷ் ராணாவின் விக்கெட்டும் அடங்கும். ராணாவின் விக்கெட் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.