KKR vs SRH 1st Innings: சரிந்து மீண்ட கொல்கத்தா.. பந்து வீச்சில் மிரட்டிய ஹைதராபாத் அணிக்கு 172 ரன்கள் இலக்கு..!
கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நடராஜன், யான்சன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஹைதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தனது அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளதாக அறிவித்தார்.
அதன் படி கொல்கத்தா அணியின் இன்னிங்ஸை குப்ராஸ் மற்றும் ஜேசன் ராய் தொடங்கினர். கொல்கத்தா அணிக்கு போட்டியின் முதல் ஓவர் மட்டும் நல்லபடியாக அமைந்தது. அதன் பின்னர், இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் குர்பாஸும், கடைசி பந்தில் வெங்கடேஷ் ஐயரும் வெளியேறினர். இவர்களது விக்கெட்டை ஹைதராபாத் அணியின் இளம் பந்து வீச்சாளர் யான்சன் கைப்பற்றினார். அதன் பின்னர் ஐந்தாவது ஓவரில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேசன் ராய் இளம் பந்து வீச்சாளர் காத்திக் தியாகியிடம் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தாலும் 49 ரன்கள் சேர்த்து சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்தது. அதன் பின்னர் கேப்டன் ராணாவுடன் ரிங்கு சிங் கைகோர்த்தார். இருவரும் சிறப்பாக ரன்கள் சேர்க்க, கொல்கத்தா அணி சரிவில் இருந்து மீண்டது. இருவரும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விளாச, 10 ஒவர்களில் கொல்கத்தா அணி 90 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதன் பின்னர் 12வது ஓவரில் கொல்கத்தா அணியின் கேப்டன் ராணா 42 ரன்கள் சேர்த்த நிலையில், ஹைதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார். அதன் பின்னர், களமிறங்கிய ரஸல் ரிங்குவுடன் கைகோர்த்தது மட்டுமில்லாமல் பவுண்டரிகளை விளாச கொல்கத்தா அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அவரும் 15 பந்தில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் மார்கண்டேயா பந்து வீச்சில் வெளியேறினார். அதன் பின்னர் வந்த சுனில் நரேனும் ஒரு ரன் மட்டும் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இந்த சீசனில் இதுவரை சுனில் நரேன் பேட்டிங்கில் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை.
அதன் பின்னர் ரிங்குவுடன் கைகோர்த்த ஷர்துல் தாக்கூர் 6 பந்தில் 8 ரன்கள் சேர்த்த நிலையில், நடராஜன் பந்து வீச்சில் வெளியேறினார். அதன் பின்னர் கொல்கத்தா அணியின் இம்பேக்ட் ப்ளேயராக அனுக்குல் ராய் உள்ளே வந்தவர், 19வது ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். தொடக்கம் முதல் விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக ரன்கள் சேர்த்து வந்த ரிங்கு சிங் 20வது ஓவரின் இரண்டாவது பந்தில் நடராஜன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். ரிங்கு சிங் 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது. நடராஜன், யான்சன் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.